×

மானாமதுரையில் சாரல் மழை: அகல்விளக்கு தயாரிப்பு பாதிப்பு

மானாமதுரை: மானாமதுரை பகுதியில் பகல், இரவு நேரங்களில் திடீரென பெய்யும் சாரல் மழையால் அகல்விளக்கு தயாரிக்கும் பணி முடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழ்கரை குலாலார் தெருவில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். இவர்கள் எந்திரங்கள் உதவியால் திருவையில் மண்ணை இட்டு கையால் கலைநயமிக்க பூந்தொட்டி, மண்பானை, குடிநீர் ஜக்குகள், பனியார சட்டிகள், தட்டுகள், அம்மன் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்தப்படும் அக்னிசட்டிகள், ஆயிரம்கண்பானைகள் உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களை தயார் செய்து வருகின்றனர். சீசனுக்கு தகுந்தவாறு பல்வேறு மண்பாண்டங்களை தயார் செய்து தென்மாவட்டங்கள் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். கார்த்திகையை முன்னிட்டு அகல்விளக்குகள் தயாரிப்பது வழக்கம். கடந்த சில நாட்களாக பகல், இரவு நேரங்களில் திடீரென பெய்து வரும் சாரல் மழையால் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், ‘கார்த்திகையை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு முன்பாகவே அகல்விளக்கு தயாரிக்கும் பணியை தொடங்கி விடுவோம். வழக்கமாக ஆடி மாத காற்றுடன் துவங்கும் பருவகாலங்களில் புரட்டாசி மாதத்தில் லேசாக மழை துவங்கும். ஐப்பசி பின்பகுதியில் பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து இரவுக்குள் மழை நின்றுவிடும். கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் அகல்விளக்குகளை தயாரிக்க முடியவில்லை. சாரல் மழையாக பெய்வதும், வெயில் அடிக்காமல் இருப்பதாலும் தயாரிக்கும் விளக்குகளில் ஈரத்தன்மை அதிகமிருக்கிறது. தொடர்ந்து காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் விளக்குகளை உலர வைக்க முடியவில்லை. இதனால் விளக்குகளை திறந்த வெளியில் உலர வைக்க முடியாமலும், ஷெட்டுகளில் போதிய இடவசதி இல்லாமல் இருப்பதால் உற்பத்தியும் குறைந்துள்ளது’ என்றனர்.

Tags : Manamadurai , Manamadurai, rain, broad lamp
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...