×

சோனியா காந்தி குடும்பத்திற்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்படுமா?: சட்டத் திருத்தத்திற்கான மசோதா இன்று மக்களவையில் தாக்கல்

டெல்லி: எஸ்பிஜி என்றழைப்படும் சிறப்பு பாதுகாப்பு படை சட்டத் திருத்தத்திற்கான மசோதாவை மத்திய அரசு மக்களவையில் இன்று தாக்கல் செய்துள்ளது. கடந்த 1984ம் ஆண்டு, பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபின் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப் பிரிவு உருவாக்கப்பட்டது. இதற்கான சட்டம் கடந்த 1988-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 1991ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபின் எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, அனைத்து முன்னாள் பிரதமர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்குவது என மாற்றியமைக்கப்பட்டது. அந்த வகையில், பிரதமர், முன்னாள் பிரதமர்கள், அவர்களின் குடும்பத்தினர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்பிஜி அதிகாரிகள் பாதுகாப்பளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை எஸ்பிஜி பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், அமைச்சரவைச் செயலாளர், உளவு அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகள் கூடி ஆலோசனை நடத்தும்.

அந்த ஆலோசனை கடந்த மே மாதத்தில் நடைபெற்றபோது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெற்று அதற்கு பதிலாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது. இனி அவர்களுக்கு, எஸ்பிஜி பாதுகாப்பல்லாது, இசட் பிளஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கிடையே, இந்தச் சட்டத்தில் தற்போது திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி மக்களவையில் தாக்கல் செய்தார். இந்தச் சட்டத்திருத்த மசோதாவின்படி சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு தற்போது பதவியிலிருக்கும் பிரதமர் மற்றும் அவரது இல்லத்தில் தங்கியிருக்கும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும். பிரதமர் பதவியிலிருந்த முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவருடன் இல்லத்தில் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு, பதவியிலிருந்து விலகிய 5 ஆண்டுகள் வரை இந்த படை பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : SPG ,Sonia Gandhi ,Bill , SPG protection for Sonia Gandhi family: Bill for law amendment
× RELATED தனிப்பிரிவு காவலரின் குழந்தைகளுக்கு தங்கம்