×

டெல்லி மக்களை ஏன் எரிவாயு கிடங்கில் தள்ளுகிறீர்கள் ? பேசாமல் வெடிகுண்டுகள் மூலம் மக்களை கொன்று விடுங்கள் : காற்றுமாசு தொடர்பான வழக்கில் நீதிபதிகள் வேதனை

டெல்லி:  டெல்லியில் நிலவும் காற்று மாசுவை கட்டுப்படுத்த மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டித்துள்ள உச்சநீதிமன்றம், இதற்கு பேசாமல் வெடிகுண்டுகள் மூலம் ஒரேயடியாக மக்களை கொன்றுவிடலாம் என்று சாடியுள்ளது.
 
டெல்லி, என்சிஆர் பகுதியில் வாழும் மக்கள் மூச்சுவிட முடியாமல் அவதி

டெல்லி காற்று மாசு, தரமற்ற குடிநீர் உள்ளிட்ட அனைத்து சுற்றுசூழல் தொடர்பான வழக்குகளும் இணைக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் டெல்லி, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் அழைக்கப்பட்டு தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும் ஏன் இதுவரை டெல்லியில் அதிகளவு காற்று மாசு நிலவி வருகிறது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பது தொடர்வதாகவும், இதனால் ஏற்படும் காற்று மாசால் டெல்லி, என்சிஆர் பகுதியில் வாழும் மக்கள் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுவதாகவும், அவர்களின் வாழ்நாள் குறைந்து வருவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

நீதிபதிகள் வேதனை


இதனிடையே காற்றுமாசால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி நகரம் நரகத்தை விட மோசமாகி உள்ளது என்று கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம்,  டெல்லி மக்களை ஏன் எரிவாயு கிடங்கில் தள்ளுகிறீர்கள் ? மாசடைந்த சூழலில் தள்ளுவதை விட 15 குண்டுகளை போட்டு ஒட்டுமொத்தமாக மக்களை கொன்றுவிடுங்கள் என வேதனையுடன் குறிப்பிட்டனர். மத்திய அரசும், டெல்லி அரசும் தங்களிடையேயான வேறுபாடுகளை மறந்து, ஒன்றாக அமர்ந்து பேசி, நகரின் பல பகுதிகளில் காற்று சுத்தப்படுத்தும் கோபுரங்களை அமைப்பது தொடர்பான திட்டத்தை 10 நாள்களில் தாக்கல் செய்யும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு நோட்டீஸ்

இதனிடையே தரமற்ற குடிநீர் தொடர்பான விவகாரத்தையும் தாமாக முன்வந்து வழக்காக உச்சநீதிமன்றம் எடுத்துக் கொண்டுள்ளது. அப்போது தரமான குடிநீர், காற்று வழங்காததற்காக, மக்களுக்கு இழப்பீடு வழங்க நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது? என்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் கேள்விஎழுப்பியது. இது தொடர்பாக  6 வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Tags : gas warehouse ,Delhi ,Judges ,Kill People: Air Pollution Case Over Judges , States, Union Territories, Notices, Delhi, Supreme Court, Air Pollution, Drinking Water
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...