மதுரை: மதுரை சமயநல்லூர் பகுதியில் இளைஞர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள தேனூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் முத்துக்குமார். இவர் ஒரு கட்டிட தொழிலாளி. தேனூர் கிராமத்தில் வஉசி இளைஞர் பேரவை என்ற ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த சமுதாய அமைப்பின் விளம்பர பலகையை வருவாய்த்துறையினர் ஆகிரமிப்பு எனக்கூறி அகற்றியுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்தும், மற்ற சமுதாய பலகைகள் இருக்கும் போது ஏன் எங்கள் சமுதாயத்தின் பலகையை மட்டும் எடுத்தார்கள் என்ற கோபத்தில் முத்துக்குமார் அப்பகுதியில் இருந்த பிஎஸ்என்எல் டவரில் ஏறி நின்றுள்ளார். ஆக்கிரமிப்பு என அகற்றப்பட்ட அந்த பலகையை அதே இடத்தில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 120 அடி உயரம் கொண்ட டவரில் ஏறி நின்று மிரட்டல் விடுத்து வருகிறார்.
தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மற்றும் சமயநல்லூர் போலீசார் அந்த இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர். பலமுறை இறங்க சொல்லியும் அந்த இளைஞர் தற்போது கீழே இறங்க மறுத்து வருகிறார். தற்போது, சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்த்ராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து இளைஞர் முத்துக்குமாரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இளைஞரின் கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்கும் என டிஎஸ்பி உறுதியளித்த போதும் அந்த இளைஞர் டவரில் இருந்து கீழே இறங்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. உடனடியாக எனது கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே தாம் கீழே இறங்குவேன் என தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இது தொடர்பாக வருவாய்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்த இளைஞருக்கு ஆதரவாக அந்த சமுதாயத்தை சேர்ந்த மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போலீசாரும் அப்பகுதியில் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோழவந்தான் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.