×

காவல் வாகனங்களில் தமிழில் 'காவல் துறை'.. பதிவேடுகள், கடிதத் தொடர்புகள், பெயர் பலகைகள் என அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும்: டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை

சென்னை : காவல்துறையில் அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் இருக்க வேண்டும் என்று
அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அவர் அனுப்பிய சுற்றறிக்கையில், காவல்துறை தங்களின் அனைத்து பதிவேடுகளையும் தமிழில் பராமரிக்க வேண்டும் என்றும். வருகைப் பதிவேட்டில் காவல்துறையினர் தமிழில் கையொப்பமிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையின் கடிதத் தொடர்புகள், குறிப்பாணைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையின் வாயிலாக தெரிவித்த டிஜிபி திரிபாதி, அனைத்து காவல் வாகனங்களிலும் தமிழில் காவல் என இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் அனைத்து அலுவலக முத்திரைகள், பெயர் பலகைகள் தமிழில் மாற்றப்பட வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக டிஜிபி திரிபாதி அனுப்பிய சுற்றறிக்கையில்,தமிழ் வளர்ச்சித் துறை இயக்ககம் சார்பில் கடந்த 7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி ஆட்சி மொழி திட்ட செயலாக்க ஆய்வு மேற்கொண்டார்கள். இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி துறை, பணியாளர்களை தங்கள் இருக்கையில் பராமரிக்கும் பதிவேடுகளை தமிழ் மொழியில் பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தன்ர். ஆகவே தமிழ் வளர்ச்சித் துறை முன்வைத்த மேல் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை தலைமை அலுவலக அனைத்து பணியாளர்களுக்கும் பிற காவல் அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உரிய அறிவுரை வழங்கி உத்தரவுகளை பின்பற்ற உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : Tamil ,Name Boards , Police, DGP Tripathi, Circular, Communication, Tamil
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...