×

ராஜாக்கமங்கலம் பகுதியில் அழிந்து வரும் மணல் திட்டுகள்: மரங்களை வெட்டுவதால் பாதிக்கப்படும் இயற்கை அரண்

ராஜாக்கமங்கலம்: மணல் திட்டுகள் என்பது சுறாவளி, சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் ஓர் அற்புதமான அமைப்பாகும். இவை இயற்கையாய் அமைந்து கிடைப்பது மிகவும் அரிது. பேரழிவுகளிலிருந்து மக்களை பாதுகாக்கும் தடுப்பு அரணாக விளங்கும் இந்த மணல்  திட்டுகளை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமையாகும்.

ராஜாக்கமங்கலம் பண்ணையூரில் தொடங்கி ஆயிரங்கால் பொழி முகம் வரை  22 ஹெக்டேர் நிலப்பரப்பில் மணல் திட்டுகள் அமைந்துள்ளன. இவை வனத்துறையின்  கட்டுப்பாட்டில் உள்ளன. வனத்துறையினர் இவற்றில் மரங்களை நடவு செய்து  பராமரித்து பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இந்த மணல் திட்டுகளில் நிற்கும்  மரங்களை சுயநலத்திற்காக சிலர் வெட்டி செல்வதாலும் மணல் அள்ளுவதாலும் மணல் திட்டுகள் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. இது சமூக ஆர்வலர்களையும், கடலோர பகுதி வாழ்மக்களையும் கவலையடைய செய்துள்ளது.

ஒரு தேசத்தின் எல்லை கோட்டில் நின்று மக்களை பாதுகாக்கும் ராணுவ வீரர்களை போன்றே இந்த மணல் திட்டுகள் பூமியின் எல்லை கோட்டை விட்டு கொடுக்காமல் இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை பாதுகாத்து வருகிறது. ஆனால் இந்த மணல் திட்டுகளிலுள்ள மரங்கள் ஒரு சிலரின் சுயநலத்திற்காக வெட்டி அழிக்கப்படுவதினாலும், மணல் திருடப்படுவதினாலும் அவை நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. இதனை தடுக்க அரசு கடுமையான சட்டங்களை கொண்டு வந்து அவற்றை தீவிரமாய் செயல்படுத்த  வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

கடும் நடவடிக்கை தேவை

இது குறித்து சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் ராஜாக்கமங்கலம்  பண்ணையூர் தொடங்கி ஆயிரங்கால் பொழிமுகம் வரையில் மணல் திட்டுகள் உள்ளன.  எல்லா கடற்கரை பகுதிகளிலும் மணல் திட்டுகள் இயற்கையாய்  அமைவதில்லை. மணல் திட்டுகளின் பாதுகாப்பில் மரங்களே நூறு  சதவிகிதம் பங்கு வகிக்கிறது. மரம் இல்லையேல் மணல் திட்டுகள் இல்லை.

எனவே  இந்த மணல் திட்டுகளை பாதுகாக்க கால காலமாக மரங்கள்  நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மரங்களின்  வேரானது மணல் திட்டுகளில் பின்னி பிணைந்து மணல் அரிப்பிலிருந்து மணல்  திட்டுகளை பாதுகாக்கிகிறது.  ஆனால் தற்போது இங்குள்ள மரங்கள் சில மர்ம நபர்களால் சுயலாபத்துக்காக வெட்டி அழிக்கப்பட்டு வருகிறது. அது போல மணல்களும் அள்ளப்படுகிறது. இதனால்  மணல் திட்டுகள் நாளுக்கு நாள் அழிந்து வருவது நமக்கு கவலையளித்து  வந்தது. கடலோரபகுதிகளில் இயற்கை வளங்களை பாதுகாப்பதில்  மக்களின் பங்கு குறித்து ஆய்வு செய்ய வந்த  தன்னார்வ அமைப்பினர் இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் மணல் திட்டுகள்  இருக்குமா என்கிற அதிர்ச்சி கேள்வியை எழுப்பி சென்றது மேலும்  கவலையடைய செய்துள்ளது.

எனவே இனியும் தாமதிக்காமல்  அரசு உடனடி நடவடிக்கை எடுத்து மணல் திட்டுகள் அழியாமல் பாதுகாக்க வேண்டும்.  குறிப்பாக மணல்திட்டை பாதுகாக்கும் மரங்களை இன்னும் அதிகரிக்க செய்ய  வேண்டும். மரங்களை வெட்டி கடத்துபவர்களை கைது செய்யும் வனத்துறையினர் பெயரளவில் சில ஆயிரங்களை அபராதம் விதிப்பதோடு விட்டு விடுவதால் மீண்டும் மீண்டும் அதே குற்றத்தை அவர்கள் செய்கின்றனர். எனவே அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்.

அடிக்கடி மரங்கள் வெட்டப்பட்டாலும் எப்போதாவது ஒரு முறைதான் வனத்துறை  பிடியில் சிக்குகின்றனர்.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே மணல்  திட்டில் நின்ற மரங்களை வெட்டி கடத்திய சிலரை வனத்துறையினர் பிடித்து  சென்றனர் பின்னர் அவர்களுக்கு அபராதம் விதித்து விடுவித்ததாக தெரிகிறது.  எனவே இன்னும் இது போன்ற கடத்தல் தொடரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே வனத்துறையினர் இந்த பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து மணல் திட்டுகளை பாதுகாத்து நம் நாட்டிற்கும் சந்ததிக்கும்  நல்லதை செய்ய வேண்டும்.

இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கும்

இந்த மணல் திட்டுகள்  மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் என அனைத்து வகையான  உயிரினங்களின் பாதுகாப்பு அரணாகவே உள்ளது என்றால் மிகையாகாது. அதாவது  சூறாவளி, சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது கடல் நீர்  ஊருக்குள் புகாமலும், அதி வேகமாக வீசும் காற்று கடற்கரை கிராமங்களை  பாதிக்காமல் தடுத்து மக்களை பாதுகாக்கவும், உலக  வெப்பமயமாவதால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் அந்த கடல் நீர்  ஊருக்குள் வராமல் தடுக்கிறது. காலநிலை மாற்றத்தாலும், உப்பு காற்றால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்தும், மக்களை பாதுகாக்கிறது.

ஆமைகள்  முட்டைகளை வைத்து  செல்ல ஏதுவாக உள்ளது. ராஜாக்கமங்கலத்தில் அமைந்துள்ள  மணல் திட்டுகளில் அழிந்துவரும் அரிய வகை ஆமை இனமான ஆளிவ் ரிட்லி என்னும்  ஆமைகள் அதிகளவில் வருகின்றன. அதுபோல அடர்ந்து நிற்கும் மரங்களில் அரிய வகை வெளிநாட்டு பறவைகளும் உள்நாட்டு பறவைகளும் கூடுகள் கட்டி இனபெருக்கம் செய்கின்றன. இத்தனை நன்மைகள் செய்கின்ற மணல் திட்டுகளை நாம் அக்கரையுடன் பேணி பாதுகாக்க வேண்டும்.

Tags : sand dunes ,area ,Rajakamangalam , Sand dunes
× RELATED 8வது நாளாக கடலில் இறங்க தடை; கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் வெறிச்சோடியது