சிவசேனா, காங்., தேசியவாத காங். கூட்டணி ஆளுநருடன் சந்திப்பு: பெரும்பான்மை பலம் தங்களுக்கே இருப்பதாக நவாப் மாலிக் பேட்டி

மும்பை: பெரும்பான்மை இல்லாததால் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் கூறியுள்ளார். பட்னாவிஸ் பதவி விலகாவிட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசை தோற்கடிப்போம் என அவர் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் திடீரென பாஜகவின் பட்னாவிஸுக்கு முதல்வராக ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். என்சிபி எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்ததாக கூறி பட்னாவிஸுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் என்சிபியின் அஜித் பவாருக்கும் துணை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், என்சிபி, சிவசேனா கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது காங்கிரஸ்-சிவசேனா- என்சிபி சரத்பவார் பிரிவு தரப்பில் உடனே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதனை உச்சநீதிமன்றம் நீதிபதி ரமணா தலைமையிலான பெஞ்ச் ஏற்கவில்லை.

அத்துடன் பட்னாவிஸ் அரசுக்கான ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏக்கள் கடிதம், பட்னாவிஸை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம் ஆகியவற்றை இன்று தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, இன்று உச்சநீதிமன்றத்தில்ஆளுநர் விடுத்த அழைப்பு கடிதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரணை நடத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் கூறியதாவது, மகாராஷ்டிரா ஆளுநரை சந்திக்க  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் விரைந்துள்ளதாக கூறினார். தங்கள் அணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக ஆளுநரிடம் கடிதம் கொடுக்க 3 கட்சிகளும் முடிவெடுத்துள்ளது. 288 எம்எல்ஏக்கள் அடங்கிய மகாராஷ்டிராவில் 165 எம்எல்ஏக்கள் ஆதரவு தங்கள் அணிக்கு இருப்பதாக நவாப் மாலிக் கூறியுள்ளார். பெரும்பான்மை இல்லாததால் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என கூறியுள்ளார். இதனிடையே, மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினர் ஆளுநரை சந்தித்து வருகின்றனர்.

Related Stories:

>