×

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ் பரோலில் விடுவிப்பு: மகனின் திருமணத்துக்காக ராபர்ட்டுக்கு 30 நாள் பரோல் வழங்கியது ஐகோர்ட்

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயல் 30 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருபவர் ராபர்ட் பயஸ். இவர் தனது மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளைச் செய்ய தனக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு  ஏற்கனவே விசாரணையின் போது ராபர்ட் பயஸின் மனு சிறைத்துறையின் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மகனின் திருமண ஏற்பாட்டிற்காக மனுதாரர் ராபர்ட் பயசுக்கு நவம்பர் 25 முதல் டிசம்பர் 24வரை 30 நாள்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் அவர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். பரோல் நாட்களில் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கவோ, அரசியல் தலைவர்களைச் சந்திக்கவோ கூடாது என்பது உள்ளிட்ட சிறை விதிகளை அவர் பின்பற்ற வேண்டும்.  

அவர் நீலாங்கரை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வக்கீல் சந்திரசேகர் என்பவரது வீட்டில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனையுடன் உத்தரவிட்டனர். இந்நிலையில் தற்போது புழல் சிறையில் இருந்து 30 நாள் பரோலில் வெளியே ராபர்ட் பயஸ் விடுவிக்கப்பட்டார். 30 நாள் பரோல் விடுப்பை அடுத்து புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொடிவாக்கம் வீட்டுக்கு பயல் செல்கிறார்.

Tags : Robert Bias ,jail ,Rajiv ,Rajeev , Rajeev murder case, Robert Bias, released on parole
× RELATED புழல் சிறையில் காவலர்கள் சோதனையில்...