நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்: அய்யாக்கண்ணு பேட்டி

வடலூர்: நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறினார். இதுகுறித்து அவர், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தில்  கூறியதாவது:கடந்த 2016ல் வரலாறு காணாத வறட்சியை தமிழகம் கண்டது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டத்தில் சென்னையை தவிர்த்து மற்ற 31 மாவட்டங்களில் வறட்சி பாதித்த மாவட்டமாக தமிழகம் அறிவித்தது. 2014ம் ஆண்டு, வறட்சி காரணமாக  அனைத்து விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த செப்டம்பரில் உச்சநீதிமன்றம்  விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய பரிசீலனை செய்யுங்கள் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பித்து 70 நாட்கள் ஆகியும் இதுவரையில் முதல்வர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வர் நதிகளை இணைக்கிறேன் என சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால் செயல்படுத்த தவறி வருகிறார். விவசாயிகளை காப்பாற்ற வேண்டுமென்றால் நதிகள் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும். அப்படி  இல்லையெனில் வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலை புறக்கணிப்பது அல்லது எதிர்த்து வாக்களிப்பது என முடிவெடுக்க உள்ளோம். இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.


Tags : rivers ,interview ,elections ,Ayyakkannu ,Government , Rivers Connection , implemented, Ignoring Local, Government Elections
× RELATED கிருஷ்ணகிரி அணையில் பிரதான மதகுகள் முழுவதும் வெட்டி அகற்றம்