×

தூத்துக்குடி பள்ளியில் சக மாணவர்கள் முன் 150 தோப்புக்கரணம் போட வைத்ததால் மாணவி தற்கொலை

* தலைமை ஆசிரியை கைது
* கம்ப்யூட்டர் ஆசிரியருக்கு வலை

தூத்துக்குடி: தூத்துக்குடிஅரசு உதவி பெறும் பள்ளியில்,  சக மாணவர்கள் முன் 150 தோப்புக்கரணம் போட வைத்ததால் மனமுடைந்து பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பள்ளி தலைமை  ஆசிரியை கைது செய்யப்பட்டார். கம்ப்யூட்டர் ஆசிரியரை  போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி அந்தோணி கருணாகரன் மகள் மரிய ஐஸ்வர்யா(16). இவர் சேதுபாதை ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 3ம் தேதி பாட்டி  இறந்ததால் மரிய ஐஸ்வர்யா பள்ளிக்கு தெரிவிக்காமல் விடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது. விடுப்புக்கு பின்னர் பள்ளிக்கு சென்ற மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில் கம்ப்யூட்டர் ஆசிரியர் ஞானபிரகாசம், 150 தோப்புக்கரணம் போடக் கூறியதோடு, மைதானத்தை ஒரு சுற்று ஓடி வரும்படி கூறியுள்ளார். அதன்படி செய்த  மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியை கனகரத்தின மணியிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர், மாணவியை மிரட்டி வகுப்பறையில் இருந்து வெளியே நிற்க வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  மாடியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு மாணவியின் தற்கொலைக்கு காரணமான கம்ப்யூட்டர் ஆசிரியரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் சமரசத்துக்கு பின்னர் அவர்கள் கலைந்து  சென்றனர்.இதையடுத்து  மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர் ஞானபிரகாசம், தலைமை ஆசிரியை கனகரத்தின மணி மீது தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று தலைமை ஆசிரியை கனக ரத்தினமணியை போலீசார் கைது செய்தனர். கம்ப்யூட்டர் ஆசிரியர் ஞானபிரகாசத்தை தேடி வருகின்றனர். தற்கொலைக்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்காத வரை உடலை  வாங்கமாட்டோம் எனக்கூறி மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : student ,suicide ,school ,Thoothukudi ,Thoothukudi School 150 Student Suicide , fellow ,students , Thoothukudi school,Student Suicide
× RELATED ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில்...