×

71 லட்சம் மரக்கன்றுகள் மாயம் 198 கோடி அரசு பணம் வீண்

சிறப்பு செய்தி: தமிழக அரசு சார்பில், ஒவ்வொரு  ஆண்டும் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பசுமை  பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ், கடந்த  2018-19-ம் நிதியாண்டில் 70 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதில், 63 லட்சம் மரக்கன்றுகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி  துறையின் மூலமாகவும், 7 லட்சம் மரக்கன்றுகள் வனத்துறை மூலமாகவும் நடப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் கடந்த நிதிநிலை அறிக்கையின்போது விளக்கம் அளிக்கப்பட்டது.இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் 71 லட்சம் மரக்கன்றுகளை நடுவது என முடிவு  செய்யப்பட்டது. இதில், 64 லட்சம் மரக்கன்றுகளை ஊரக வளர்ச்சி மற்றும்  ஊராட்சி துறை மூலமாகவும், 7 லட்சம் மரக்கன்றுகளை வனத்துறை மூலமாகவும் நடுவது என  தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்துறைகள் மூலமாக, மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  உறுதி திட்டத்துடன் இணைந்து, மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியுள்ளது. இதற்காக, தமிழக அரசு சார்பில் நடப்பு நிதியாண்டில் ரூ.198.57 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில்,  கூலிக்கான செலவினத்தொகை ரூ.193.60 கோடி, கருவிகளுக்கான வாடகை மற்றும் இதர செலவினங்களுக்காக ரூ.4.97 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், கூலித்தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.193.60 கோடியானது முற்றிலும் மத்திய அரசால்  ஏற்றுக்கொள்ளப்படும். இதர செலவின தொகையில் 25 சதவீதத்தை மாநில அரசு ஏற்கும்  என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும், ஊராட்சி நிலங்கள், அரசு நிலங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள்,  கல்லூரிகள், பூங்காக்கள் மற்றும் இதர காலியிடங்களில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்  கீழ் மரங்கள் தொடர்ந்து நடப்பட வேண்டும். ஆனால், கடந்த 6 மாத காலமாக மரக்கன்றுகள் எதுவும் நடப்படவில்லை. இதற்கான கணக்கு வழக்கும் முறையாக பேணப்படுவது இல்லை. நடப்பு நிதியாண்டில், இத்திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி, முடங்கிக் கிடக்கிறது.

இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு 3 மாத காலம் மட்டுமே ஆகிறது. மரக்கன்றுகள் தற்போதுதான் வளரத்துவங்கியுள்ளது. வனத்துறை சார்பில், அந்தந்த மாவட்ட வன அலுவலர் கட்டுப்பாட்டில் இவை வளர்க்கப்படுகிறது. இவை, ஒரு குறிப்பிட்ட அளவு உயரம் வளர்ந்த பிறகுதான், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு, நட முடியும். மரக்கன்று நடுவதுடன் நின்றுவிடாமல், அவற்றை, ஆடு, மாடுகள் கடித்து தின்றுவிடாத வகையில் சுற்றிலும் இரும்பு வலைக்கூண்டு அமைத்து, பாதுகாக்கிறோம். தொய்வின்றி தண்ணீர் ஊற்றி பராமரிக்கிறோம். கடந்த நிதியாண்டில் 90 சதவீதம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களால் 10 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இனி, வரும் காலங்களில் இழப்பின்றி, 100 சதவீத மரக்கன்றுகளையும் நட்டு, பாதுகாக்க நடவடிக்கை ேமற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றனர்.

Tags : 71 lakh trees ,worth Rs
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...