×

திருவண்ணாமலை குபேர லிங்க சன்னதியில் அலைமோதிய பக்தர்கள்: தரிசனத்துக்கு பின் கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் குபேர லிங்க சன்னதியில் நேற்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருவண்ணாமலையில், அண்ணாமலையாரை தேவர்கள் வலம் வந்து துதித்ததாக புராணம் தெரிவிக்கிறது. அந்த வகையில் செல்வத்தின் அதிபதியான குபேரன் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று மாலை  4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் இங்கு வழிபட்ட பின்னர் கிரிவலம் செல்வதாகவும் ஐதீகம். இந்த குபேர லிங்கத்தை வழிபடுவோருக்கு செல்வங்கள் கிடைக்கும், முறையில்லா வழியில் செல்வம் சேர்த்தவர்களுக்கு அந்த பாவங்கள் விலகும்  என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். அதன்படி, கார்த்திகை மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியான நேற்று மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்க சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. சுவாமிைய தரிசிக்க கோவை, திருப்பூர், சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, திருவண்ணாமலையில் குவிந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குபேர லிங்கத்தை தரிசனம்  செய்த பின்னர் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.

கட்டணம் வசூலால் பக்தர்கள் அதிருப்தி
பக்தர்களின் வசதிக்காக குபேர சன்னதி முன்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. சன்னதி அமைந்துள்ள காஞ்சி சாலையில் நேற்று காலையில் இருந்தே கார் மற்றும் கனரக  வாகனங்கள் எதையும் போலீசார் அனுமதிக்கவில்லை. அதேபோல், பக்தர்களின் வாகனங்கள் திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் அருகே நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு வழக்கமாக கட்டணம் வசூலிப்பது இல்லை. ஆனால், நேற்று ஒரு  வாகனத்துக்கு ₹50 முதல் ₹100 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.

Tags : Alaimodhi Pilgrims ,shrine ,darshan ,Thiruvannamalai ,Girivalam ,Kubera Linga , Alaimodhi ,Pilgrims , Kubera Linga , after darshan
× RELATED அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது