×

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் தலா 1 டன் வீதம் அரிசி ஒதுக்கீடு குறைப்பு: கேரளாவுக்கு கடத்தப்படுகிறதா?

சிறப்பு செய்தி: ரேஷன்கடைகளில் ஒரு டன் வீதம் ரேஷன் அரிசி இந்த மாதம் குறைக்கப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த அரிசி முறைகேடாக கேரளாவுக்கு கடத்தப்படுகிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், துவரம்பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. மொத்தம் 34 ஆயிரத்து 773 ரேஷன் கடைகள்  வாயிலாக 2 கோடி 5 லட்சத்து 71 ஆயிரத்து 1 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இணைந்த நிலையில் ரேஷன் விநியோகத்தில் பல்வேறு மாற்றங்கள்  செய்யப்பட்டு வருகின்றன. முன்னுரிமை உள்ள ரேஷன் அட்டை, முன்னுரிமை இல்லாத ரேஷன் அட்டை என்று ரேஷன்கார்டுகள் தரம் பிரிக்கப்பட்டன. இந்தநிலையில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசியாகவும், மக்கள் பயன்படுத்த முடியாத  நிலையில் உள்ள அரிசியாகவும், கல், குருனை நிறைந்த, கருப்பு நிற அரிசியாகவும் விநியோகம் செய்யப்படுகிறது.

 மாத கடைசி நாட்களில் ரேஷன்கடைகளில் அரிசி வாங்க செல்கின்றவர்களுக்கு அரிசி கிடைப்பது இல்லை. அரிசி ஒதுக்கீடு குறைவாக இருப்பதாக கடை விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக விற்பனையாளர்களுக்கும்,  பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம், மோதல்கள் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்தநிலையில் இந்த மாதம் திடீரென்று அதிக அளவில் ரேஷன் அரிசி குறைக்கப்பட்டுள்ளது. ஒரு ரேஷன் கடைக்கு ஒரு டன் முதல்  ஒன்றரை டன் வரை ரேஷன் அரிசி குறைத்தே விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாத கடைசியில் அரிசி வாங்க செல்கின்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர்.ஆயிரம் கார்டுகளுக்கு மேல் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு 80 பேருக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய அரிசி குறைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை போன்று பல கடைகளிலும் ரேஷன் அரிசி குறைக்கப்பட்டுள்ளது ரேஷன் வாங்க  செல்கின்ற மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அந்த வகையில் ஒரு கடைக்கு ஒன்று முதல் ஒன்றரை டன் வீதம் அரிசி குறைக்கப்படுகிறது. ஒரு கடைக்கு 10 முதல் 20 கார்டுகளுக்கு அரிசி குறைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பெருமளவு அரிசி குறைக்கப்பட்டு வருவது புதிய  சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் 34 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கு மேல் உள்ள நிலையில் இவற்றில் தலா ஒரு டன் வரை ரேஷன் அரிசி குறைக்கப்படும்போது பெருமளவில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக  கூறப்படுகிறது. ரேஷன் அரிசி குறைக்கப்பட்டு வழங்கப்படுவது தொடர்பாக அதிகாரிகளோ, மாவட்ட நிர்வாகமோ வெளிப்படையாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் சில பகுதிகளில் கடைக்காரர்களே ஒதுக்கீடு  குறைக்கப்பட்டுள்ளது என்று கூறி முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு முறைகேடாக உள்ள அரிசி லாரிகளில் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு செல்கின்ற அரிசி கடத்தல் லாரிகள் பிடிபடும்போது அவை பெரும்பாலும் பிற மாவட்ட பதிவு எண்களை கொண்டவையாக இருப்பது இதனை உறுதிப்படுத்துகிறது. மேலும் அரிசி மூட்டைகள் ரேஷன்  கடைகளில் உள்ள அரிசி மூட்டைகளை போன்றே இருப்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும். பெருமளவில் செல்கின்ற கடத்தல் லாரிகளுக்கு பச்சைக்கொடி காட்டும் அதிகாரிகள் சிறிய அளவில் கடத்தலில் ஈடுபடுவவர்களை பிடித்து அதற்கு கணக்கு  காண்பித்து வருகின்ற நிலையும் இருந்து வருகிறது. ரேஷன் கடைகளில் அரிசி குறைப்பு தொடர்பாக கடை விற்பனையாளர்களிடம் கேட்டால் அவர்களிடம் இருந்து முறையான பதில் வருவது இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  இந்தநிலையில் சர்க்கரை மட்டும் பெற்று வருகின்ற ரேஷன் அட்டைகளை அரிசி பெறும் அட்டைகளாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒதுக்கீடு ரேஷன் கடைகளுக்கு குறைக்கப்பட்டுள்ள நிலையில் சர்க்கரை  அட்டைகளையும் அரிசி அட்டைகளாக மாற்றுவதன் மூலம் புதிய பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அரிசி அட்டைக்கு வீடு வீடாக ஆய்வு
சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆன்லைனிலும், நேரடியாகவும் விண்ணப்பிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் கார்டு மாற்றம் செய்யப்படாது என்று  கூறப்படுகிறது. இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் வீடு வீடாக ஆய்வு நடத்த வழங்கல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வட்ட வழங்கல் அலுவலகங்களில் வருவாய் ஆய்வாளர் நிலையில் உள்ள அலுவலர்கள் அரிசி  அட்டையாக மாற்ற விண்ணப்பித்தவர்களின் வீடு வீடாக சென்று விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான அளவில் மேம்பாடு அடைந்தவர்கள், வருமான அளவில் ஏற்கனவே இருந்த நிலையைவிட  மோசமாக இருப்பவர்கள் என்று கண்டறிய தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வருமான நிலையில் மோசமாக உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மட்டுமே சர்க்கரை கார்டுகள் அரிசி கார்டுகளாக மாற்றப்படும் என்று அதிகாரிகள்  கூறுகின்றனர்.

Tags : ration shops ,Tamil Nadu Nation Reduction , Ration shops, Tamil Nadu, rice ,capita
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு