×

இலங்கையில் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் கோரி மீனவர்கள் வேலைநிறுத்தம்: 800 விசைப்படகுகள் ராமேஸ்வரத்தில் கரைநிறுத்தம்

ராமேஸ்வரம்: இலங்கையில் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவக்கினர். இதனால் ராமேஸ்வரம் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட  விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டன.இலங்கை கடற்படையால் கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் இலங்கை கடல் பகுதியில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர், இலங்கை அரசு  அந்தப் படகுகளை விடுவித்தது. இதில் நல்ல நிலையில் இருந்த படகுகள் மீட்கப்பட்டு தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டன. ஏராளமான படகுகள் சேதமடைந்து, மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், அவற்றை மீட்க முடியாமல் கைவிட  வேண்டிய நிலை ஏற்பட்டது.
படகை இழந்த மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதால்,  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப்  போராட்டம் துவக்கினர். இதனால் ராமேஸ்வரம் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக ராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ‘‘வரும் 29ம் தேதி இந்தியா வரவுள்ள இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன்,  பிரதமர் மோடி, தமிழக மீனவர்களின் பிரச்னைகள் குறித்து  பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், பாக் ஜலசந்தி கடலில் பிரச்னையின்றி தொடர்ந்து மீன்பிடி தொழில் செய்வது குறித்தும், மீனவர்கள் மற்றும் படகுகள் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் வற்புறுத்த வேண்டும்.  இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த படகுகளுக்கு, நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என வலியறுத்தப்பட்டது.

Tags : fireworks strike ,Fishermen ,Sri Lanka ,strike ,Rameswaram ,Sri Lanka Fishermen , Sri Lanka, Fishermen ,strike, Rameswaram
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...