×

ஏழு மணிக்கு அனுமதி; 8 மணிக்கு ரத்து சதுரகிரி மலையேற திடீர் தடை : 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏமாற்றம்

வத்திராயிருப்பு: சதுரகிரி மலைப்பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால், கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், தாணிப்பாறைக்கு நேற்று வந்திருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள்  ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. இதன்படி,  கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நேற்று (நவ. 24) முதல் 27ம் தேதி வரை பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இதையொட்டி விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் நேற்று அதிகாலை 4 மணி முதல் தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள வனத்துறை கேட் முன்பு குவியத் தொடங்கினர். காலையில் மழை  அறிகுறி தென்பட்டதால், 6 மணிக்கு வனத்துறையினர் கேட்டை திறக்கவில்லை. இதனால், அவர்களுடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின், காலை 7 மணியளவில் வனத்துறை கேட் திறக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைப்பாதை வழியாக கோயிலுக்குச் சென்றனர். திடீரென 8 மணியளவில் சதுரகிரி மலைப்பகுதியில் மழை  பெய்ய தொடங்கியது. இதையடுத்து, வனத்துறையினர் கேட்டை மூடி விட்டனர். மழை காரணமாக, 27ம் தேதி வரை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியையும் ரத்து செய்தனர்.காலை 8 மணிக்குப் பின் வந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் 11 மணி வரை காத்திருந்தும், வனத்துறையினர் அனுமதிக்காததால், ஏமாற்றத்துடன் திரும்பினர். இதற்கிடையே, அதிகாலையில் மலையேறி கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் தரிசனம்  முடிந்து மாலையில் பத்திரமாக திரும்பினர்.தயார்நிலையில் மீட்புக் குழு: மலையில் கோயில் பகுதியில் மழை பெய்து வருவதால், வனத்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இரவு நேரங்களில் கோயிலில் பக்தர்கள் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Tags : trekking cancellation ,pilgrims ,Disruption ,devotees ,Mount Chaturigiri Trekking , Permission, Sudden ,Mount Chaturigiri, disappointed
× RELATED உத்தரப்பிரதேசத்தில் சந்தி சிரிக்கும்...