×

சரத்பவார்-பாஜ எம்பி திடீர் சந்திப்பால் பரபரப்பு: ஆதரவு கேட்டு பேச்சுவார்த்தை

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாஜ அரசுக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை, பாஜ எம்பி சந்தித்து பேசியது பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒரே இரவில் அதிரடியான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்ததை தொடர்ந்து, முதல்வராக பாஜவின் தேவேந்திர பட்நவிசும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக்  கொண்டனர். இதை எதிர்த்து சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்வராக பதவியேற்ற பட்நவிசை,  வரும் 30ம் தேதி சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க  உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் பாஜ எம்பி சஞ்சய் ககாடே, மும்பையில் உள்ள, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் இல்லத்திற்கு வந்தார். அவரை தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித்  தலைவர் ஜெயந்த் பாட்டீலும், சரத் பவாரின் இல்லத்திற்கு வந்தார். பாஜ எம்பி, சரத்பவாரை திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் 30ம் தேதி ெபரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்ட நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் அளிக்கும் உத்தரவை பொருத்தே, மகாராஷ்டிர அரசியலில் அடுத்தகட்ட திருப்பம் நடக்கவுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ ‘லபக்’
சிவசேனா மூத்த தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டே, மிலிந்த் நர்வேகர் ஆகியோர் மும்பை விமான நிலையத்திற்கு அருகே நின்றிருந்தனர். அங்கு தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ சஞ்சய் பன்சோடே, விமான நிலையத்தின் ஒருபகுதியில் இருந்து  வந்தார். அவரை மடக்கி பிடித்த சிவசேனா தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த எம்எல்ஏவை மடக்கிப் பிடித்து, தங்களது காரில் ஏற்றிச் ெசன்றனர். பின்னர், சிவசேனா எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஓட்டலுக்கு  அழைத்துச் சென்றனர். சிறிது நேரம் கழித்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், எம்எல்ஏ பன்சோடேடுடன் போனில் பேசினார். அதன்பின் மற்றொரு தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ சஷிகாந்த் ஷிண்டேவை ஓட்டலுக்கு அனுப்பி  வைத்தார். பின்னர் கட்சி கூட்டத்திற்காக பன்சோடை ஒய்.பி.சவான் மையத்திற்கு சஷிகாந்த் ஷிண்டே அழைத்துச் சென்றார்.

எம்எல்ஏ-வை காணவில்லை
தெற்கு மும்பையில் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனுக்கு சென்ற ஷாஹாபூர் தொகுதி தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ லத் தரோடா, திடீரென அவரது மகன் கரணுடன் வெள்ளிக்கிழமை இரவு தானே சென்றுவிட்டார். இதுதொடர்பாக, முன்னாள் எம்எல்ஏ பாண்டுரங் பரோரா, ஷாஹாபூர் காவல் நிலையத்தை அணுகி எம்எல்ஏ தரோடா மாயமானதாக புகாரை பதிவு செய்தார். இதற்கிடையில், தரோடாவின் மகன் கரண் மும்பையில் நிருபர்களிடம் கூறுகையில்,  ‘‘சனிக்கிழமை காலை முதல் எனது தந்தை யாருடனும் செல்லவில்லை. சரத் பவாரின் பக்கம்தான் என் தந்தை உள்ளார்’’ என்றார்.

ஓட்டலுக்கு மாற்றப்பட்ட எம்எல்ஏ.க்கள்
மகாராஷ்டிரா அரசியல் சூழ்நிலையால், குதிரைப் பேரம் நடப்பதை தடுக்க, தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் இரவு சொகுசுப் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டு மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க  வைக்கப்பட்டனர். எனினும் அக்கட்சியின் 5 எம்எல்ஏக்கள் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை.சிவசேனா கட்சியின் 56 எம்எல்ஏக்களில் 55 பேர் நவி மும்பையில் உள்ள லலித் ஓட்டலில் அழைத்து வரப்பட்டுள்ளனர். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் மொபைல் போன்களை, கட்சி தலைமையிடம் ஒப்படைத்து விட்டனர்.  ஒவ்வொரு அறையிலும் தலா இரண்டு எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோர், ஓட்டலுக்கு அவ்வப்போது வந்து செல்கின்றனர்.காங்கிரஸ் தனது 44  எம்எல்ஏக்களையும் கட்சி ஆளும் மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலுக்கு அழைத்துச் சென்றது.

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான திக்விஜயா சிங் சட்டப்பேரவை உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே, தேர்தல் முடிவு வெளியான பின், குதிரை பேரம் நடப்பதாக  எழுந்த சர்ச்சையையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நேற்று காலை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் மும்பையில் உள்ள அந்தேரி ஜே.டபிள்யூ  மேரியட் ஓட்டலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள், வரும் 30ம் தேதி வரை ஓட்டலிலேயே இருப்பர் என்று  கூறப்படுகிறது.

170 எம்.எல்.ஏ.க்கள் பட்நவிசுக்கு ஆதரவு
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிசுக்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும் அவர் மாநில சட்டப்பேரவையில் தனது மெஜாரிட்டியை நிரூபிப்பார் என்றும் பாஜ நேற்று நம்பிக்கை தெரிவித்தது. பாஜ மூத்த தலைவர் ஆஷிஷ் ஷெலார் நேற்று இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வர் பட்நவிஸ் ஒரு நிலையான மற்றும் வலுவான அரசை வழங்குவார். தேவேந்திர பட்நவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றிருப்பது மாநில மக்களிடையே மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்புகளையும்  ஏற்படுத்தி இருக்கிறது.

பட்நவிசுக்கு 170க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. பாஜ அரசு தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்துக் காட்டும். புதிய அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்ட மாநில ஆளுநர் பகத் சிங்  கோஷ்யாரி நவம்பர் 30 வரை கால அவகாசம் வழங்கி இருக்கிறார். பதவியேற்பு நிகழ்ச்சி இருட்டறையில் ரகசியமாக நடத்தப்பட்டதாக கூறப்படுவது தவறானது. நாங்கள் எல்லோரும் காலை 6 மணிக்கு ‘ஷாகாவில்’ பங்கேற்கும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். அதிகாலை நேரத்தில் செய்பவற்றை நல்லதாக  கருதுபவர்கள். இவ்வாறு ஆஷிஷ் ெஷலார் கூறினார்.

செல்லாது... செல்லாது...
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் பதவியில் இருந்து அஜித் பவாரை நீக்கியதற்கு பாஜ நேற்று ஆட்சேபம் ெதரிவித்தது. இந்த நடவடிக்கை செல்லுபடியாகாது என்று அக்கட்சி கருத்து தெரிவித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் பாஜ.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து துணை முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து அவரை அந்த கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கி தேசியவாத  காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உத்தரவிட்டுள்ளார்.இந்த நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்த பாஜ தலைவர் ஆஷிஷ் ஷெலார், கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ளாத ஒரு கூட்டத்தில் அஜித் பவாரை சட்டப்பேரவை கட்சிக் குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கி அவருக்கு  பதிலாக ஜெயந்த் பாட்டீலை நியமித்த நடவடிக்கை செல்லுபடியாகாது என்று தெரிவித்தார்.

இது பற்றி ஆஷிஷ் ஷெலார் மேலும் கூறியதாவது:சட்டமன்ற குழு தலைவர் என்ற அடிப்படையில்தான் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை மாநில ஆளுநரிடம் அஜித் பவார் கொடுத்தார். எனவே அவருக்கு பதிலாக ஜெயந்த் பாட்டீலை நியமித்த நடவடிக்கை செல்லாது. தேவேந்திர பட்நவிசை  முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்த மாநில ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அக்டோபர் 30ம் தேதி அஜித் பவாரை  சட்டமன்ற குழு தலைவராக நியமித்ததை எதிர்த்து எதுவும் சொல்லப்படவில்லை.புதிய அரசு அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த பிறகு தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஆளுநர் இதை சரிபார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்ய மோடி பயன்படுத்திய சிறப்பு அதிகாரம் ‘12’
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி, நேற்று முன்தினம் அதிகாலை 5.47க்கு ரத்து செய்யப்பட்டது. ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும்போது, அதை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை கூடி, ஜனாதிபதிக்கு பரிந்துரைக்க  வேண்டும். ஆனால், மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்வதற்கு  அரசியலமைப்பு சட்டத்தில் தனக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பிரதமர் மோடி பயன்படுத்தி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. மாநிலங்களில்  ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பயன்படுத்தப்படும் 356வது சட்டத்தின் 12வது உட்பிரிவு (செயல்பாட்டு நடவடிக்கைகள்), ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்யும்படி ஜனாதிபதிக்கு நேரடியாக பரிந்துரை செய்யும் அதிகாரத்தை பிரதமருக்கு  வழங்குகிறது. அசாதாரண சூழ்நிலை, மிகவும் அவசரம் என்று பிரதமர் கருதும் நிலையில் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றாமல், இந்த அதிகாரத்தை பிரதமர் பயன்படுத்த முடியும். இதன்படிதான். பட்நவிஸ் முதல்வராக பதவியேற்பதற்கு வழிவிடும்  வகையில், மகாராஷ்டிராவில் இருந்த ஜனாதிபதி ஆட்சியை மோடி நீக்கி உள்ளார்.

தேர்தல் முதல்...சுப்ரீம் கோர்ட் வரை
மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது முதல் ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட இழுபறி, தேவேந்திர பட்நவிஸ், அஜித் பவார் ஆகியோர் திடீரென ரகசியமாக பதவியேற்றது முதல் அவர்கள் பதவியேற்றதற்கு எதிராக உச்ச  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது வரையிலான் சம்பவங்கள் இங்கே தேதி வாரியாக தொகுக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 21: 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு 14வது தேர்தல் நடைபெற்றது.
அக்டோபர் 24: தேர்தல் முடிவுகள் வெளியானது. பாஜ 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றன.
நவம்பர் 9: ஆட்சியமைக்க பாஜ.வுக்கு அழைப்பு விடுத்த ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, பெரும்பான்மையை 48 மணிநேரத்துக்குள் நிரூபிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
நவம்பர் 10: தன்னால் ஆட்சியமைக்க இயலாது என பாஜ அறிவிப்பு,
நவம்பர் 10: ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்த ஆளுநர் 24 மணிநேரத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
நவம்பர் 11: பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறி சிவசேனா ஆட்சியமைக்க உரிமை கோரி, மெஜாரிட்டியை நிரூபிக்க 3 நாள் அவகாசம் கோரியது.
நவம்பர் 11: சிவசேனாவின் 3 நாள் அவகாச கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்த ஆளுநர், ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார்.
நவம்பர் 12: ஆட்சியமைக்க உரிமை கோரியதை ஆளுநர் நிராகரித்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனுத்தாக்கல் செய்தது.
நவம்பர் 12: ஆளுநரின் பரிந்துரைப்படி மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
நவம்பர் 22: சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகள் இணைந்து உருவாக்கிய ‘மகாராஷ்டிரா விகாஸ் அகாடி’ (மகாராஷ்டிரா முன்னேற்ற முன்னணி), உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்க ஒருமனதாக முடிவு எடுத்தது.
நவம்பர் 23: அதிகாலை 5.47 மணிக்கு ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு முதல்வராக தேவேந்திர பட்நவிஸ் மற்றும் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றனர்.
நவம்பர் 23: ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியின் முடிவை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
நவம்பர் 24: ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்ய பரிந்துரைக்கும் மகாராஷ்டிரா ஆளுநரின் கடிதத்தை நாளை(இன்று) சமர்ப்பிக்குமாறும், மத்திய அரசும் தேவேந்திர பட்நவிஸ் மற்றும் அஜித் பவாருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டது.

Tags : Sarat Pawar-Baja ,meeting ,Sudden Meeting Sensation: Negotiations for Support Sudden ,Saratpavar , Saratpavar-Baja MB,sudden meeting,support
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...