×

தனது துறையை பற்றியே முழுமையாக தெரியாத அமைச்சர் ஜெயக்குமார் அனைத்து துறை பிரச்னையில் மூக்கை நுழைப்பதா?: திமுக கடும் கண்டனம்

சென்னை: பாஜவுக்கு ‘காவடி’ தூக்கும் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்து  துறைகளின் பிரச்னைகளிலும் மூக்கை நுழைத்து சூப்பர் சீஃப் மினிஸ்டர்’ ஆக  முயற்சிக்க வேண்டாம் என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.திமுக செய்தித்தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. வெளியிட்ட அறிக்கை:‘மீன்வளத்துறை மற்றும் பணியாளர் துறை’ பற்றியே இன்னும் முழுமையாக தெரிந்திராத அமைச்சர்  ஜெயக்குமார், தன்னை ஏதோ ‘ஆக்டிங் சீஃப் மினிஸ்டர்’ போல் நினைத்துக் கொண்டு, அனைத்துத் துறைகள் சார்ந்த கேள்விகளுக்கும் பதில்  சொல்வது, அதிகப்பிரசங்கித்தனம் என்பதை விட, அவசரமாக அரிதாரம் பூசிய மோகத்தில் போடும் போலி நாடகம் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நாகரீகமான பேச்சுக்கும், நயமான வார்த்தைகளுக்கும், ஆக்கப்பூர்வமான எதிர்கட்சி தலைவர் பணிகளுக்கும்-நாட்டுக்கே இலக்கணமாகத் திகழும் எங்கள் தலைவரை பார்த்து, ‘தரக்குறைவான முறையில் விமர்சனம் செய்கிறார்’ என்று, அமைச்சர்  பச்சைப் பொய் கூறுவது; அதிமுக அரசின் ‘வெற்று அறிவிப்புகளிலும்’, ‘வெட்டியான விளம்பரங்களிலும்’, ‘விதண்டாவாத அறிக்கைகள், பேட்டிகளிலும்’ உள்ள பொய்யும் புரட்டும் போலவே இருக்கிறது.

சசிகலாவுக்கு ‘சல்யூட்’ அடித்து ‘தலை குனிந்து நின்று’ அமைச்சர் பதவி பெற்று, தன் மகனுக்கும் எம்.பி. பதவி பெற்ற அமைச்சர் ஜெயக்குமார், ‘மக்களாட்சி’ பற்றிப் பேசுவது, அதிகாரத்தில் இருப்பதால் வரும் ‘ஆணவப் பேச்சே’ தவிர -  அர்த்தமுள்ள பேச்சு அல்ல.
ஆகவே, அமைச்சர் ஜெயக்குமாருக்கு, ஒரேயொரு மாநில உரிமையையாவது மீட்டிருக்கிறோம் என்று  சுட்டிக்காட்டும் தைரியம் இருக்கிறதா? தமிழகத்தின் எல்லா உரிமைகளையும் தாரை வார்த்து விட்டு - பாஜகவிற்கும், பாஜகவின்  கொள்கைகளுக்கும் கைகட்டி, ‘காவடி’ தூக்கும் அமைச்சர் ஜெயக்குமார் போன்றவர்கள் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், அவ்வப்போது போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்களின் பிரச்னைகள் குறித்தும் முதலில் கவலைப்படட்டும்.வீணாக அனைத்து துறைகளின் பிரச்னைகளிலும் மூக்கை நுழைத்து, எங்கள் தலைவர் ஒரு முறை குறிப்பிட்டது போல் ‘சூப்பர் சீஃப் மினிஸ்டர்’ ஆக முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Jayakumar ,department ,Minister Jayakumar ,DMK , Completely unaware,department,Minister Jayakumar , departmental issues?
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...