×

உட்கட்சி தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு உறுப்பினராக இருக்கவேண்டும்: அதிமுக பொதுக்குழுவில் சட்டவிதிகளில் திருத்தம் செய்ய ஒப்புதல்

சென்னை: ஒருவர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் தான் அதிமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிட முடியும் என்று சட்டவிதிகளில் திருத்தம் செய்ய அதிமுக ெபாதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.அதிமுக செயற்குழு,  பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில்  நேற்று நடந்தது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை  தாங்கினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை   ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை  வகித்தனர். துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி,  வைத்திலிங்கம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன்,  தங்கமணி, எஸ்.பி.வேலுமணி,  செல்லூர் ராஜூ, ெஜயக்குமார், ஆர்.பி. உதயகுமார்,  பென்ஜமின், மா.பா. பாண்டியராஜன் மற்றும் அலெக்ஸாண்டர், பலராமன் உள்ளிட்ட  எம்எல்ஏக்கள், எம்பிக்கள், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சம்பத்குமார்,  பூந்தமல்லி ஒன்றிய  செயலாளர் காட்டுப்பாக்கம் ஜி.திருநாவுக்கரசு மற்றும்  மாநில, மாவட்ட நிர்வாகிகள், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு  உறுப்பினர் என மொத்தம் 4 ஆயிரம் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 23  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விவரம் வருமாறு:
* சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் சூட்டி, அதனை ``புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்’’ என்று அழைக்கச் செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. ₹1,264 கோடி செலவில் மதுரையில் ஏய்ம்ஸ்  மருத்துவமனையை அமைத்திட அடிக்கல் நாட்டியிருப்பதற்கும் பாராட்டுக்கள்.nமருத்துவப் படிப்பிற்கு மாணவர்களை தேர்வு செய்யும் நீட் நுழைவு தேர்வு முறை பல குறைபாடுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.  எனவே, நீட் நுழைவுத் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்; குறைந்தபட்சம் தமிழகத்தின் பல  தனித்தன்மைகளைக் கருத்தில் கொண்டு நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபு வகுப்பினர்) இடஒதுக்கீடு வழங்கப்படாதது சமூக நிதிக்கு எதிரானது.  குறிப்பாக,  பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபு வகுப்புகளைச் சேர்ந்த மருத்துவ பட்ட மேற்படிப்புக்குச் செல்வோர், இடஒதுக்கீடு இல்லையெனில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.  எல்லோருக்கும் சமநீதி வழங்கும் கடமை மத்திய  அரசுக்கு இருக்கிறது.  

எனவே, மருத்துவ பட்ட மேற்படிப்பில் இடஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபு வகுப்பினர்) வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனசட்டதிருத்தம்: பொதுக்குழுவில், அதிமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திட வேண்டும். மேலும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவோர் உறுப்பினராக 5  ஆண்டுகள் இருந்திட வேண்டும் என அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்ய ஒப்புதல் பெறப்பட்டது.

பொதுக்குழுவில் அசைவம் இல்லை
அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் ெஜயலலிதா இருந்தபோது சைவம், அசைவம் என்று தனித்தனியாக பரிமாறப்படுவது வழக்கம். அதுவும் அசைவத்தில் பிரியாணி, சிக்கன் 65, மீன் வருவல் உள்ளிட்ட அதிகப்படியான சைட் டிஸ்கள்  இருக்கும். ஆனால், நேற்று நடந்த பொதுக்குழு, செயற்குழுவில் சைவம் மட்டுமே பரிமாறப்பட்டது. சாதம், ெவஜ்பிரியாணி, சாம்பார், ரசம், தயிர், அப்பளம், வடை,  அவியல், பொறியல், ஊறுகாய், குலோப் ஜாம், ஜாங்கிரி, கருப்பட்டி பாயாசம்,  பாதாம் கீர், வாழைப்பழம், ஐஸ்கிரீம், ஸ்வீட் பீடா உள்ளிட்டவை வழங்கப்பட்டது. சாப்பிடும் இடத்திற்கு வந்தவர்கள் இலை போட்டதும் சைவ சாப்பாட்டை பார்த்து அதிர்ந்தனர். தெரியாமல் சைவ இடத்திற்கு வந்து விட்டோம் என்று அவர்கள்  எழுந்திருக்க முற்பட்டனர். அப்போது உணவை பரிமாறியவர்கள் சைவம் மட்டும் தான், அசைவம் கிடையாது என்று தெரிவித்தனர். அதன் பின்னரே அதிமுகவினர் சைவ சாப்பாட்டை சாப்பிட்டனர். ஜெயலலிதா இருந்த போது அசைவ உணவு  அனல் பறக்கும். ஆனால் அந்த நடைமுறையையே மாற்றி விட்டார்களே என்று சிலர் ஆதங்கப்பட்டனர்.

பேனர், கொடிகம்பம் இல்லை
அதிமுகவினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து சுப என்ற இளம்பெண் பலியானார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பேனர் வைக்க தடை விதித்து சென்னை உயர்  நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு அனைத்து கட்சியினரும் பேனர் வைப்பதை தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த நில நாட்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடியை வரவேற்று கோவையில் அதிமுகவினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த  கொடிகம்பம் விழுந்து அனுராதா என்கிற ராஜேஸ்வரி என்ற இளம்பெண் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அதிமுக மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், கொடிகம்பம், பேனர் வைக்க கட்சி  தலைமை தடை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வரை வரவேற்று பேனர், கொடிகம்பம் எதுவும் வைக்கப்படவில்லை. பொதுக்குழு நுழைவாயிலில் மட்டும் தென்னை இலை  தோரணம் வைக்கப்பட்டிருந்தது.

வாஜ்பாய், அருண்ஜெட்லிக்கு இரங்கல்
அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் அதிமுகவில் இறந்த கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, முன்னாள் மத்திய அமைச்சர்  சுஷ்மா சுவராஜ், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ராம்ஜெத்மலானி, ஜார்ஜ்பெர்னான்டஸ், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டிஎன்.சேஷன், நடிகர் கிரேஸி மோகன், நெல் ஜெயராமன்,  வன்னிய குரு ஏ.கே.நடராஜன் உள்ளிட்ட 246 பேருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : AIADMK ,UPA ,elections ,UDF , UDF elections,member, Amendment ,AIADMK
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...