கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு டிசம்பர் முதல் மீண்டும் தண்ணீர் திறக்க ஆந்திரா ஒப்புதல்: 2 டிஎம்சி கிடைக்க வாய்ப்பு

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு டிசம்பர் முதல் மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் தமிழக அதிகாரிகளுக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டிஎம்சி நீரை பல்வேறு கட்டங்களாக தமிழகத்துக்கு தர வேண்டும்.இந்த நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தவணைகாலம் தொடங்கிய நிலையில், கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழக அரசு கடிதம் எழுதியும் பதில் இல்லை. இதை தொடர்ந்து தமிழக  அரசு சார்பில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து கோரிக்ைக வைத்தனர்.

இதையேற்று, கடந்த செப்டம்பர் 25ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் செப்டம்பர் 28ம் தேதி தமிழக எல்லைக்கு வந்தடைந்தது. ஆரம்பத்தில் கண்டலேறு அணையில் 500 கன அடி  திறந்து விடப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரித்தது. இந்த தவணை காலத்தில் 5 டிஎம்சியாவது தமிழகத்துக்கு தர வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்த நிலையில், ஆந்திர அரசு 3 டிஎம்சி வரையாவது தரும்  என்று எதிர்பார்த்தது.இந்த நிலையில் கடந்த 31ம் தேதியுடன் முதல் தவணை காலம் முடிவடைந்தது. ஆனாலும், 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 45 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. எனவே, அங்கிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும்  என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிருஷ்ணா கால்வாயோர பகுதிகளில் பாசனத்திற்கு ஆந்திர அரசு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. இதனால், கடந்த 11ம் தேதி முதல் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் குறைந்த அளவு தண்ணீர் தமிழக எல்லைக்கு வழங்கி வருகிறது. இதுவரை 2.4 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு ஆந்திரா தந்துள்ளது.

இந்த நிலையில் ஆந்திர விவசாயிகளுக்கு இம்மாதம் 30ம் தேதி வரை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்பிறகு கிருஷ்ணா கால்வாயோர பகுதிகளில் பாசனத்திற்கு தண்ணீர் தருவது நிறுத்தபடவுள்ளது. எனவே, டிசம்பர் முதல் மீண்டும் தமிழகத்துக்கு தர ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. 2 டிஎம்சி வரை தர சம்மதித்து இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக தமிழக அதிகாரிக்கு ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

Related Stories:

>