திருமுல்லைவாயல் காவலர் குடியிருப்பில் போலீஸ்காரரை உயிருடன் எரித்துக் கொல்ல முயற்சி: தப்பியோடிய கள்ளக்காதலி கைது

ஆவடி: திருமுல்லைவாயல் போலீஸ் குடியிருப்பில் மனைவியை பிரிந்து வசிக்கும் போலீஸ்காரரை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொல்ல முயன்ற கள்ளக்காதலியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிப்பவர் வெங்கடேசன் (30).  ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை இரண்டாம் அணியில் காவலராக பணியாற்றி வருகிறார். சொந்த ஊர் விழுப்புரம். இவரது மனைவி ஜெயா. தம்பதிக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது ஒரு மகன், மகள் உள்ளனர்.  கடந்த 2015ம் ஆண்டு  கருத்து வேறுபாடு ஏற்பட்டு தம்பதி இருவரும் பிரிந்தனர். வெங்கடேஷுடன் மகளும், ஜெயாவுடன் மகனும் வசித்து வருகின்றனர். மேலும் ஜெயா விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே வெங்கடேஷ் சென்னையில் இளைஞர் காவல் படையில் பணியாற்றியபோது புளியந்தோப்பு பகுதியை சார்ந்த ஆஷா (32) என்பவருடன்  கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 7 மாதத்திற்கு முன்பு ஆஷா தனது கணவர் ஜோதிராமலிங்கம் மற்றும் 2 குழந்தைகளை விட்டுவிட்டு காவலர் குடியிருப்பில் வெங்கடேஷுடன்  வந்து குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் வெங்கடேஷ் நடத்தையில்  ஆஷா சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர்  எந்த பெண்ணுடனும் பேசக்கூடாது என வெங்கடேசிடம் கூறியுள்ளார். மேலும் அவர் யாரிடமாவது பேசினால் செல்போனை பிடுங்கி யார்? என விசாரித்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து  வெங்கடேஷ்   குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஆஷா, ‘‘எங்கு சென்றுவிட்டு வருகிறாய்?’’ என கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது வெங்கடேஷ், ‘‘என்னிடம் அடிக்கடி தகராறு செய்தால் செத்து விடுவேன் அல்லது உன்னை பற்றி போலீசில் புகார் செய்வேன்’’ என ஆஷாவிடம் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் அதிகரித்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆஷா வீட்டில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வெங்கடேஷ் மீது ஊற்றி, தீ வைத்துள்ளார். உடல் மளமளவென பற்றி எரிய தொடங்கியதும் வலி தாங்காமல் வெங்கடேஷ் சத்தம்போட்டு அலறியுள்ளார். இதை பார்த்த ஆஷா மொபட்டில் ஏறி தப்பி சென்றார். வெங்கடேஷ் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை  மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். புகாரின்பேரில் திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், எஸ்.ஐ சீதாலட்சுமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆஷாவை நேற்று மாலையில் கைது செய்தனர். பின்னர் அம்பத்தூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : policeman ,Tirumullaivayal ,police station ,fugitive , Attempts, burn policeman alive,Tirumullaivayal police station,fake fugitive,arrested
× RELATED அம்பத்தூர் நீதிமன்றத்தில்...