புழல் சிறையில் அதிரடி சோதனை கைதியிடம் செல்போன் சிம் கார்டுகள் பறிமுதல்

புழல்: சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் விசாரணை, தண்டனை, பெண்களுக்கு என தனித்தனியே 3 பிளாக்குகள் உள்ளன. இங்கு தண்டனை மற்றும் விசாரணை பிரிவுகளில் மட்டும் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள், செல்போன், சார்ஜர் மற்றும் சிம் கார்டுகளை கைதிகள் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு அங்குள்ள ஒரு சில சிறைத்துறை ஊழியர்களும் பணத்தை பெற்று உடந்தையாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து புழல் சிறைச்சாலையில் சோதனை கண்டறியும் குழுவினர் அவ்வப்போது பல்வேறு அதிரடி சோதனைகள் நடத்தி, இதுபோன்ற முறைகேடான செல்போன், கஞ்சா நடமாட்டங்களை தடுக்க முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் புழல் சிறையில் உள்ள விசாரணை பிளாக்கில் நேற்று முன்தினம் இரவு சோதனை கண்டறியும் குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கைதிகள் தங்கியிருந்த ஒரு அறையின் கழிவறையில் ஒரு செல்போன், சார்ஜர் மற்றும் சிம் கார்டு மற்றும் பேட்டரி போன்றவை கிடப்பதை கண்டு பறிமுதல் செய்தனர்.விசாரணையில் சென்ட்ரல் ரயில் நிலைய திருட்டு வழக்கில் கடந்த மார்ச் மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி (23) என்ற கைதி செல்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.இதுகுறித்து ஜெயிலர் சீனிவாசலு அளித்த புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த செல்போன் யார் மூலம் கைதியின் கைக்கு சென்றது? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>