×

பெரும்பாக்கம் ஏரியில் சடலம் மீட்ட விவகாரம் கொலை செய்யப்பட்டவர் திருநங்கை: உடற்கூறு ஆய்வில் உறுதி

சென்னை : பெரும்பாக்கம் ஏரியில் கை, கால்களை கட்டி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்த விவகாரத்தில், திருப்பமாக அவர் திருநங்கை என்பது உறுதியானது. இதையடுத்து எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் ஏரியில் கடந்த 22ம் தேதி காலை சுமார் 24 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதப்பதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து அந்த பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டு சென்னை  ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படைகள் அமைத்து அந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஏரியை சுற்றி உள்ள பகுதியில் உள்ள சிசிடிவி பொருத்தப்பட்டுள்ள கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில், இறந்து கிடந்தவர் வயிற்றில் கருப்பை இல்லை. அதனால் இவர் 80 சதவீதம் திருநங்கையாக இருக்கலாம் என இருந்தது. அதனால் பெண்ணா? திருநங்கையா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து உடற்கூறு ஆய்வுக்காக  ஆய்வகத்திற்கு அவரது சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வின் முடிவில் திருநங்கை என்பது உறுதியானது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள  50க்கும் மேற்பட்ட  திருநங்கைகளை காவல் நிலையம் அழைத்து வந்து போட்டோவை காட்டி கடந்த இரண்டு நாட்களாக போலீசார் விசாரணை  நடத்தினர். மேலும் வெவ்வேறு பகுதிகளில் உள்ள திருநங்கைகளிடமும் போட்டோவை காட்டி விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : lake , Transgender man,murdered,lake
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...