×

காஷ்மீரில் முதல் முறையாக அதிரடி தீவிரவாதிகளை வேட்டையாட களமிறங்கியது முப்படை பிரிவு: மத்திய அரசு புதிய வியூகம்

புதுடெல்லி: காஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக, முப்படையும் களமிறங்கி உள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், இம்மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு கடந்த ஆகஸ்ட்டில் அதிரடி நடவடிக்கை எடுத்தது. பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி தாக்குதல்களில் ஈடுபட்டு வந்த தீவிரவாதிகளை ஒடுக்கவும், பாகிஸ்தானின் சதிகளை முறியடிக்கவும் இந்த வியூகம் வகுக்கப்பட்டது. நிர்வாக ரீதியாக காஷ்மீர் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டதால், அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு தீவிரவாதிகளின் நடமாட்டம் ஒடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த தீவிரவாத வேட்டையை மேலும் தீவிரப்படுத்துவதற்கான மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. தீவிரவாத ஒழிப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக முப்படைகளையும் சேர்ந்த சிறப்பு கமாண்டோ வீரர்கள் பிரிவை காஷ்மீரில் களமிறக்கி இருக்கிறது. தீவிரவாதிகள் வேட்டையில் முப்படைகளையும் ஒரே நேரத்தில் மத்திய அரசு பயன்படுத்துவது இதுவே முதல் முறை.இதற்காக, ‘பாதுகாப்பு படைகளின் சிறப்பு பிரிவு’ (ஏஎப்எஸ்ஓடி), பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் தரைப்படையின் ‘பாரா’ கமாண்டோக்கள், ‘மார்கோஸ்’ என்ற கடற்படை கமாண்டோக்கள், ‘கருட்’ என்ற விமானப்படை கமாண்டோக்கள் அடங்கிய சிறப்பு படையினர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில், பாரா கமாண்டோக்கள் ஸ்ரீநகர் அருகேயும், மார்கோஸ் கமாண்டோக்கள் வுலார் ஏரி பகுதியிலும், கரூட் கமாண்டோக்கள் லோலப் மற்றும் ஹாஜின் பகுதியிலும் களமிறக்கப்பட்டு இருக்கின்றனர்.

Tags : Armed Forces For The First Time In Kashmir Armored Forces The First Time ,Kashmir , Armed Forces , First Time, Kashmir
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...