×

தொடர்ச்சியாக 4வது இன்னிங்ஸ் வெற்றி வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா உலக சாதனை: டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து முன்னிலை

கொல்கத்தா: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 46 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதுடன், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 4 இன்னிங்ஸ் வெற்றிகளைப் பதிவு செய்த முதல் அணியாக உலக சாதனை படைத்தது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி, முதலில் விளையாடிய டி20 தொடரில் 1-2 என்ற கணக்கில் போராடி தோற்றது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதின. இந்தூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ், 130 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல்/இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்றது. கடந்த 22ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் இளஞ்சிவப்பு வண்ணப் பந்து உபயோகிக்கப்பட்டது. டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 106 ரன்னுக்கு சுருண்டது. இந்திய வேகம் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

அடுத்து களமிறங்கிய இந்தியா, முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 347 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் கோஹ்லி 136 ரன், புஜாரா 55, ரகானே 51 ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து, 241 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம், 2ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்திருந்தது. நேற்று ஆட்டத்தை தொடர்ந்த அந்த அணி சரியாக 47 நிமிடம் மட்டுமே தாக்குப்பிடித்து 195 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (41.1 ஓவர்). முஷ்பிகுர் ரகிம் அதிகபட்சமாக 74 ரன் (96 பந்து, 13 பவுண்டரி) எடுத்தார். மிராஸ் 15, தைஜுல் 11, அல் அமின் 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். அபு ஜாயித் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். காயம் காரணமாக ஓய்வு பெற்ற மகமதுல்லா (39 ரன்) பேட்டிங் செய்ய வரவில்லை. இந்திய பந்துவீச்சில் உமேஷ் 5, இஷாந்த் 4 விக்கெட் வீழ்த்தினர்.இன்னிங்ஸ் மற்றும் 46 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை இஷாந்த் ஷர்மா தட்டிச் சென்றார். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 60 புள்ளிகளை முழுமையாகப் பெற்ற இந்தியா, மொத்தம் 360 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

* இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 4வது இன்னிங்ஸ் வெற்றி இது. இதன் மூலமாக டெஸ்ட் வரலாற்றில் இந்த உலக சாதனையை நிகழ்த்தும் முதல் அணி என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
* டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை படைத்த முதல் கேப்டன் என்ற பெருமை விராத் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது.
* ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகமான பின்னர், இந்தியா தொடர்ச்சியாக 3வது ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியை 2-0 என்ற கணக்கிலும், தென் ஆப்ரிக்காவை 3-0 என்ற கணக்கிலும் வீழ்த்திய இந்தியா, தற்போது வங்கதேசத்தை 2-0 என வென்றுள்ளது.
* கேப்டனாக கோஹ்லி தனது 10வது இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்து, டோனியின் சாதனையை (9 இன்னிங்ஸ் வெற்றி) முறியடித்துள்ளார்.
* சொந்த மண்ணில் இந்திய அணி தொடர்ச்சியாக 12வது தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
* இந்திய அணி தொடர்ச்சியாக 7 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. முன்னதாக 2013ல் தொடர்ச்சியாக 6 டெஸ்டில் வென்றதே சிறப்பான செயல்பாடாக இருந்தது.
* 2வது டெஸ்டில் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் 19 விக்கெட்டை கைப்பற்றி முந்தைய சாதனையை முறியடித்தனர். முன்னதாக 2017ல் இலங்கைக்கு எதிராக ஈடன் கார்டனில் நடந்த டெஸ்டில் 17 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். சொந்த மண்ணில் நடந்த டெஸ்டில் இந்திய ஸ்பின்னர்கள் ஒரு விக்கெட் கூட எடுக்காதது இதுவே முதல் முறையாகும்.


Tags : Bangladesh ,victory ,innings , Fourth,consecutive,innings victory ,over, Bangladesh
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...