×

பதவியேற்பு விழாவுக்கு போனவங்க வந்துட்டாங்க...: தேசியவாத காங்கிரஸ் தகவல்

மும்பை: கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்நவிசும் துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்ற பிறகு காணாமல் போன 5 எம்.எல்.ஏ.க்களில் 3 பேரை தொடர்புக் கொண்டு விட்டதாகவும் அவர்கள் கட்சிக்கு திரும்பி விட்டார்கள் என்றும் தேசியவாத காங்கிரஸ் கூறியிருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் அஜித் பவாருடன் சென்று பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்களில் தவுலத் தரோடா (சஹாப்பூர் தொகுதி), நிதின் பவார் (கல்வான்), நர்ஹரி ஜிர்வால் (தீன்தோரி), பாபாசாகேப் பாட்டீல் (அக்மத்பூர்) மற்றும் அனில் பாட்டீல் (அமல்னேர்) ஆகிய 5 பேர் காணாமல் போய்விட்டதாக கூறப்பட்டது. இவர்களில் அனில் பாட்டீல், பாபாசாகேப் பாட்டீல் மற்றும் தவுலத் தரோடா ஆகிய மூன்று பேரையும் தொடர்பு கொண்டுவிட்டதாகவும் அவர்கள் கட்சிக்கு திரும்பி விட்டார்கள் என்றும் தேசியவாத காங்கிரஸ் நேற்று தெரிவித்தது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:காணாமல் போன 5 எம்.எல்.ஏ.க்களில் 3 ேபரை கண்டுபிடித்து விட்டோம். அவர்கள் சரத் பவார் தலைமை மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அனில் பாட்டீல் எம்.எல்.ஏ. தனது டிவிட்டர் பக்கத்தில், “ராஜ்பவனில் என்ன நடக்கப்போகிறது என்பதை தெரியாமலேயே நான் அங்கு சென்றேன். அஜித் பவார் சட்டமன்ற கட்சி தலைவர் என்பதால் அவர் பின்னால் சென்றேன். நான் இப்போதும் சரத் பவார் பக்கம்தான் இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.மற்ற 2 எம்.எல்.ஏ.க்களான நர்ஹரி ஜிர்வால் மற்றும் நிதின் பவார் ஆகியோரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களும் விரைவில் கட்சிக்கு திரும்புவார்கள்.

துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவாரையும் சமரசம் செய்து கட்சிக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அஜித் பவார் தன் தவறுகளை ஏற்றுக் கொண்டு கட்சிக்கு வந்தால் அவருக்கு நல்லது. அவர் மட்டும் தனி ஆளாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. இவ்வாறு நவாப் மாலிக் கூறினார்.மாநில காங்கிரஸ் தலைவரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான அசோக் சவானும் நேற்று சரத் பவாரை சந்தித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அசோக் சவான், “சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசிடம் போதிய எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் இந்த கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். காணாமல் போன தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் விரைவிலேயே அந்த கட்சிக்கு திரும்புவார்கள்” என்றார்.

Tags : Nationalist , Nationalist,Congress,Information
× RELATED 2014 ல் பா.ஜ ஆட்சி அமைத்த பிறகு 121...