×

விடுமுறையில் விசாரணை இந்தாண்டில் 3வது முறை

உச்ச நீதிமன்றம் மிக, மிக அவசரமான நேரத்தில்தான் விடுமுறை தினத்தில் முக்கிய வழக்குகள் மீது விசாரணை நடத்தும். அந்த வகையில், மகாராஷ்டிராவில் பாஜ அரசு பதவியேற்றதை எதிர்த்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்துள்ள வழக்கை ஞாயிற்றுக் கிழமையான நேற்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது. இந்த ஆண்டில் இதுபோன்று விடுமுறை தினத்தில், உச்ச நீதிமன்றம் செயல்படுவது இது மூன்றாவது முறையாகும்.

கடந்த ஏப்ரல் 20ல், அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஊழியர் ஒருவர் கூறி்யிருந்த பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக சனிக்கிழமையில் உச்ச நீதிமன்றம அமர்வு அவசரமாக கூடியது. இதேபோல், நவம்பர் 9ம் தேதி சனிக்கிழமை கூடிய உச்ச நீதிமன்ற அமர்வு, அயோத்தி வழக்கில் தீர்ப்பு கூறியது. மூன்றாவது முறையாக நேற்று, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.


‘பெரும்பான்மையை நிரூபிக்காமல் ஓடுகிறது பாஜ’
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று அளித்த பேட்டியில், “மகாராஷ்டிராவில் தற்போது சட்ட விரோதமாக ஆட்சி மைக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிப்பது மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். எங்கள் கோரிக்கை மிகவும் எளிமையானது. சட்டப்பேரவையை கூட்டுங்கள். பெரும்பான்மையை நிரூபிக்க சொல்லுங்கள். யாருக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதோ அவர்கள் ஆட்சி அமைக்கட்டும். பாஜ.வும், அஜித் பவாரும் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதில் இருந்து வெட்கப்பட்டு, தப்பி ஒடுகின்றனர்.  பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால் நாங்கள் எங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம். ஆளுநர் மாளிகையை பயன்படுத்தி சட்ட விரோதமாக ஆட்சியை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நள்ளிரவு ரகசிய நடவடிக்கைளையும் நிரூபிப்போம்,” என்றார்.

திடீர் அரசியல் மாற்றத்தால்
பேராசிரியருக்கு காய்ச்சல்: விடுமுறை கேட்டு கடிதம்
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க இருந்த நிலையில், மறுநாள் காலையில் யாரும் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டு தேவேந்திர பட்நவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இந்த தடாலடி மாற்றமும், எதிர்பாராத திருப்பமும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் கல்லூரி பேராசிரியர் ஒருவருக்கு காய்ச்சலே வந்து விட்டதாம். சந்திராப்பூரில் இருந்து 43 கிமீ தொலைவில் உள்ள கட்சந்தூர் என்ற ஊரில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றுபவர் ஜாகீர் சையத். ‘மகாராஷ்டிராவில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றத்தாலும், தேவேந்திர பட்நவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்ற காட்சியை டிவி.யில் பார்த்ததாலும் எனக்கு காய்ச்சல் வந்து விட்டது. எனவே, இன்று எனக்கு ஒருநாள் விடுப்பு அளிக்கும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்,’ என கல்லூரி முதல்வருக்கு அவர் கடிதம் கொடுத்தார். ஆனால்,  முதல்வர் அதை நிராகரித்தார். இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிவசேனா தொண்டர் தற்கொலை முயற்சி
மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்பார் என்று சிவசேனா தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், நேற்று முன்தினம் காலை தேவேந்திர பட்நவிஸ் திடீரென முதல்வராக பதவியேற்றார். இது சிவசேனாவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவ்வாறு அதிர்ச்சிக்குள்ளான தொண்டர்களில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.வாஷிம் மாவட்டத்தில் உள்ள உமரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் பாலு ஜாதவ். தேவேந்திர பட்நவிஸ் முதல்வரானதை அறிந்ததும் கடும் விரக்திக்குள்ளான ரமேஷ் பாலு மனோரா சவுக் பகுதிக்கு வந்து பாஜவுக்கு எதிராக கோஷமிட்டவாறு கூர்மையான பிளேடால் தனது கை நரம்புகளை தாறுமாறாக வெட்டினார். அவரது கையில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனை பார்த்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் ஓடிச் சென்று ரமேஷ் பாலுவை தடுத்தார். அதற்குள் அங்கு கூட்டம் கூடி விட்டது. படுகாயமடைந்த ரமேஷ் பாலு வாஷிமில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ரமேஷ் பாலுவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

Tags : Vacation hearing , Vacation,hearing , 3rd time, year
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்