×

குட்கா விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கிறது முன்னாள் டிஜிபி, 2 ஐஜிக்கு சம்மன்: சிபிஐ தீவிர விசாரணையை தொடர்ந்து அமலாக்கத்துறை வழக்கு பதிந்து அதிரடி

சென்னை: குட்கா வழக்கில் திடீர் திருப்பமாக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் ஐஜிக்கள் தினகரன் மற்றும் தர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை திடீரென சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து குட்கா  வழக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தற்போது கலக்கமடைந்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் முதல் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை ெசய்ய தமிழக அரசு தடைவிதித்தது. ஆனால் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உதவியுடன் எவ்வித தடையுமின்றி குட்கா  விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இதுகுறித்து தொடர் புகார்களின் அடிப்படையில் சென்னை செங்குன்றத்தில் உள்ள குட்கா வியாபாரி மாதவராவுக்கு சொந்தமான குடோனில் கடந்த 2016ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, குட்கா விற்பனை செய்ய லஞ்சம் வாங்கிய காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பெயர் பட்டியல் அடங்கிய டைரி சிக்கியது. அந்த டைரியில், சுகாதாரத்துறை அமைச்சர், டிஜிபி, முன்னாள் போலீஸ் கமிஷனர், 2  இணை கமிஷனர்கள், ஒரு துணை கமிஷனர், ஒரு உதவி கமிஷனர் மற்றும் சுகாதாரத்துறை, சுங்கத்துறை, உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் மாமூல் கொடுத்து வந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. பிறகு, அந்த பட்டியலுடன் மேல்  நடவடிக்கை எடுக்கும்படி வருமான வரித்துறை  தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.  அதைதொடர்ந்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குட்கா விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, குட்கா வியாபாரி மாதவராவிடம் அமைச்சர்கள், முன்னாள் டிஜிபிக்கள் மற்றும் உயர் காவல் துறை  அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் லஞ்சம் பெற்றதும், அந்த வகையில் ரூ.40 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதும் தெரியவந்தது. இந்த வழக்கில் காவல் துறை உயர் அதிகாரிகள் சிக்கி உள்ளதால் அவர்களின் கீழ் இயங்கும்லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தினால் முறையாக நடைபெறாது என்று திமுக சார்பில் எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதைதொடர்ந்து குட்கா வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ  விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

 பின்னர் சிபிஐ வழக்கு பதிவு செய்து, குட்கா வியாபாரிகளான மாதவராவ், சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர்  ரமணா வீடு என 35 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. அதில், முறைகேடு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி சிபிஐ அதிகாரிகள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபிக்களான ஜார்ஜ், டி.ேக.ராஜேந்திரன், கூடுதல்  கமிஷனர் தினகரன், தற்போது விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளராக உள்ள ஜெயகுமார், டிஎஸ்பி மன்னர் மன்னன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலமாக பதிவு செய்தனர்.
அந்த விசாரணையை தொடர்ந்து குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், குப்தா மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பாண்டியன், செந்தில் முருகன், சிவக்குமார் ஆகிய 6 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து புழல்  சிறையில் அடைத்தனர்.
 கைது செய்யப்பட்ட குட்கா வியாபாரிகள் மற்றும் அதிகாரிகள் அளித்த தகவலின் படி கடந்த டிசம்பர் 7 மற்றும் 11ம் தேதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கரின் நேர்முக உதவியாளர் சரவணனிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையைத்  தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் ரமணா ஆகியோரிடம், சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அதைதொடர்ந்து சிபிஐ வழக்கு தொடர்பான  அறிக்கையை அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுப்பியது. அதன் அடிப்படையில் குட்கா வியாபாரிகளான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர் கடந்த 2013 முதல் 2016ம் ஆண்டு வரை தமிழகத்தில் சட்ட விரோதமாக குட்கா  உள்ளிட்ட போதை பெருட்கள் தயாரித்து விற்பனை செய்ததில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு 639.40 கோடி ரூபாய் முறைகேடு செய்து வருமானம் ஈட்டியது தெரியவந்தது.

 அந்த பணத்தில் காயத்ரி ரிலேட்டர்ஸ், மேதா டெய்ரி பிரைவேட் லிமிடெட், வைஜெயந்தி ஸ்பின்னர்ஸ் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் ஆந்திரா, புதுச்சேரி, சென்னை, சேலம் உள்ளிட்ட இடங்களில் நிறுவனங்கள் தொடங்கி முதலீடு செய்தது  தெரியவந்தது.
அதைதொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோருக்கு சொந்தமான ரூ.243.80 கோடி மதிப்புள்ள 174 அசையா சொத்துக்கள் மற்றும் ரூ.2.29 கோடி மதிப்புள்ள பங்கு முதலீடு மற்றும் சொகுசு  கார்கள் என மொத்தம் ரூ.246 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கடந்த ஜூலை 29ம் தேதி அதிரடியாக முடக்கியது. கடந்த 10 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த குட்கா வழக்கு மீண்டு சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. குட்கா வழக்கில் தொடர்புடைய அமைச்சர் மற்றும்  காவல் துறை உயரதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சிபிஐ,  அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்தது. அதன்படி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து தனது விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குட்கா வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு வரும் டிசம்பர் 2ம் தேதி ராஜாஜி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும் படி  அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

அதேபோல், 2013 மற்றும் 2016 ஆண்டுகளில் உயர் பதவியில் இருந்த இருந்த சென்னை கூடுதல் கமிஷனரும் ஐபிஎஸ் அதிகாரியான தினகரன் மற்றும் தற்போது  காவல் துறை நவீனமயமாக்கல் ஐஜியாக உள்ள தர் ஆகியோருக்கும் டிசம்பர்  3ம் தேதி நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பட்டுள்ளது.   மூன்று அதிகாரிகளை தொடர்ந்து, இந்த வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, முன்னாள் டிஜிபி ஜார்ஜ்,  டிஐஜி நிர்மல் குமார் ஜோஷி உள்ளிட்ட காவல்  துறை உயரதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.இதனால் குட்கா வழக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் தற்போது  கலக்கமடைந்துள்ளனர்.

லஞ்ச அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்
காவல் துறையில் நேர்மையாகவும், சட்டம் ஒழுங்கை கடைபிடிக்கும் உயரதிகாரிகளுக்கு  ஒவ்வொரு ஆண்டும் முதல்வர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர்  23ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர்  விருதுகள் பெற  தேர்வு செய்யப்பட்ட போலீஸ் உயரதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வழங்கினார். குட்கா வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது. அப்படி இருக்க இதில் சம்பந்தப்பட்ட  3 ஐஜிக்களுக்கு இந்த ஆண்டு  விருது வழங்கப்பட்டுள்ளது. உயரிய விருதான   முதல்வர் விருதுகளை களங்கப்படுத்தும் வகையில் 3 பேரை தமிழக அரசு தேர்வு  செய்து வழங்கியது போலீசார் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : CBI ,IG ,DGP ,affair ,The Kutka , Kutka , Former DGP, , IG, CBI ,Case
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...