×

கோவை மாவட்டத்தில் கைத்தறி நெசவு தொழில் நலிவு: ஜி.எஸ்.டி வரி விதிப்பால் பாதிப்பு

பெ.நா.பாளையம்: கோவை மாவட்டத்தில் குடிசை தொழிலாக உள்ள கைத்தறி நெசவு தொழில், ஜி.எஸ்.டி.வரி விதிப்பால் பாதிப்படைந்துள்ளது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள கூடலூர் கவுண்டம்பாளையத்தில் குடிசைத்தொழிலாக கைத்தறி பட்டுப்புடவைகள் நெய்யப்பட்டு வருகிறது. கோரா சில்க், நைஸ் பட்டு, கேரளா பட்டு போன்ற பட்டு புடவைகள் இங்கு தயாரிக்கப்படுகிறது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த கைத்தறி தொழில் ஆரம்பத்தில் 500 இடங்களில் செயல்பட்டு வந்தது. தற்போது, பல்வேறு நெருக்கடி காரணமாக 100 இடங்களுக்கும் குறைவான இடத்தில் மட்டுமே நடக்கிறது. இத்தொழிலை கடந்த 2 ஆண்டு காலமாக ஜி.எஸ்.டி. வரி புரட்டிப்போட்டு விட்டது.

இங்குள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொடுக்கப்படும் ஒரு பாவு உருளையில் 10 புடவைகள் தயாரிக்கலாம். ஒரு தறி வைப்பதற்கு குறைந்தபட்சம் 27,000 ரூபாய் ஆகும். தொழில் நலிவுற்ற நிலையில் தற்போது இங்குள்ள இளைஞர்கள் வேறு வேலைக்கு சென்றுவிட்டனர். அதனால், பெரும்பாலான தறிக்கூடங்கள் காலியாக கிடக்கின்றன. மிகவும் ஏழ்மையில் உள்ள இவர்கள், கைத்தறி மூலம் தயாரித்த விதவிதமான அழகிய புடவைகள், கோவை மாவட்டம் மட்டுமின்றி, வெளிமாவட்ட ஜவுளிக்கடைகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவற்றை வாங்கி விற்கும் வியாபாரிகள், நல்ல லாபம் பார்க்கின்றனர். ஆனால், உற்பத்தியாளர்களோ வறுமையில் வாடுகின்றனர். இது பற்றி இப்பகுதியை சேர்ந்த கைத்தறி நெசவு தொழிலாளி நந்தகோபால் கூறுகையில், ‘’ஐந்தே முக்கால் மீட்டர் நீளமுள்ள புடவை நெய்வதற்கு 2 நாட்கள் ஆகும். 2 பேர் வேலை செய்யவேண்டும்.

நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பாவு மற்றும் பொருட்கள் கொடுத்து விடுகிறார்கள். ஒரு புடவைக்கு 800 ரூபாய் மட்டுமே கூலியாக கொடுக்கப்படுகிறது. புட்டா மற்றும் ஜரிகை வேலைப்பாடுகளுக்கு செலவு போக, மீதி ஒரு புடவைக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை மட்டுமே லாபம் கிடைக்கும். ஆனால், ஜவுளிக்கடைக்காரர்கள் பல ஆயிரம் ரூபாய் லாபம் பார்த்து விடுகின்றனர். மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 20 புடவைகள் நெய்து கொடுக்க முடியும். கூலி பற்றாக்குறையால் நிறைய பேர் இத்தொழிலை விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்றுவிட்டனர்’’ என்றார். நைஸ் பட்டு புடவை நெய்து வரும் பழனிசாமி மனைவி வனஜா (55) கூறுகையில், ‘’எனது கணவரிடமிருந்து இந்த நெசவு தொழிலை கற்றுக்கொண்டேன். சொந்தமாக தறி வைத்துள்ளோம். ஆரம்பத்தில் கூலிக்கு அல்லாமல், தனிப்பட்ட முறையில் வெளியே கடைகளுக்கு ஆர்டர் எடுத்து செய்து வந்தோம்.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிற்கு பிறகு நிறைய நெருக்கடி ஏற்பட்டதால், தனிப்பட்ட முறையில் வெளியே கடைகளுக்கு சப்ளை செய்ய முடியவில்லை. ஒரு சேலையை உற்பத்தி செய்து கடைக்கு அனுப்புவதற்குள் 2 முறை 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி கட்ட வேண்டியுள்ளது. கட்டுப்படியாகாத காரணத்தால், தற்போது கூலிக்கு நெசவு செய்து வருகிறோம்’’ என்றார். கூட்டுறவு சங்க உறுப்பினர் சவுந்தர்யராஜன் கூறுகையில், ‘’கடுமையான ஜி.எஸ்.டி. வரி விதிப்பாலும் கைத்தறி நெசவு தொழிலுக்கான அடிப்படை கூலி உயர்த்தப்படாத காரணத்தாலும் இத்தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதியம் உயர்த்தப்படவில்லை. இத்துறையில் உள்ள ஊழியர்களுக்கு, தமிழக அரசின் இன்சூரன்ஸ் திட்டம் உள்ளது.

ஆனால், செயல்படுத்தப்படவில்லை. தொடர்ச்சியாக உட்கார்ந்தே நெசவு செய்வதால் முதுகுவலி, பைல்ஸ் தொந்தரவு, கர்ப்பப்பை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே, கைத்தறி நெசவாளர்களுக்கு தனி காப்பீட்டு திட்டம் கொண்டு வரவேண்டும். விபத்து இழப்பீடு, இறப்பு நிவாரணம் போன்ற நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். இத்தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை போக்க, தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். லட்சக்கணக்கான தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டும்.’’ என்றார்.

Tags : Coimbatore District , Coimbatore, Handloom Textile Industry
× RELATED வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும்...