×

எண்ணிலடங்கா மாசுகளால் தாமிரபரணி தண்ணீர் விஷமாக மாறும் அபாயம்: பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி வேதனை

வி.கே.புரம்: பாபநாசம் தலையணை, தாமிரபரணி படித்துறை பகுதிகளை பார்வையிட்ட பசுமைத் தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி, எண்ணிலடங்கா மாசுகளால் தாமிரபரணி தண்ணீர் விஷமாக மாறும் அபாயம் நிலவுவதாக வேதனையுடன் தெரிவித்தார். நெல்லை மாவட்டம், பாபநாசம் தலையணை, பாபநாசம் தாமிரபரணி படித்துறை பகுதிகளை பசுமைத் தீர்ப்பாய நீதிபதி ஜோதிமதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ தாமிரபரணி நதியில் குளிக்க வருகைதரும் மக்கள் மேற்கொள்ளும் விழிப்புணர்வற்ற நடவடிக்கைகளால் நதி மாசுபட்டு வருகிறது. குறிப்பாக சோப்பு போட்டு குளித்தல், துவைத்தல், பரிகாரம் முடித்த பிறகு துணிகளை ஆற்றிலேயே விட்டுச்செல்லுதல் போன்ற எண்ணிலடங்கா மாசுகளால் தாமிரபரணி தண்ணீர் விஷமாக மாறும் அபாயம் நிலவுகிறது.

மேலும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி துவங்கும் இடத்திலேயே காணப்படும் இது போன்ற மாசுகளால் 1600 இக்கோலிய பாக்டீரியக்கள் உருவாகியுள்ளன. இதனால் மாசுபட்ட இந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்தும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களுக்கு, இந்த பாக்டீரியாக்கள் தான் தண்ணீர் விஷமாக மாற வாய்ப்பு உள்ளது. இதனிடையே வி.கே.புரம் நகராட்சியின் சுகாதார ஊழியர்கள், தாமிரபரணி நதியில் இருந்து வாரத்திற்கு 10 டன் துணிகளை, உயிரை பணயம் வைத்து அகற்றி வருவது பாராட்டத்தக்கது. எனவே, கழிவுதுணிகளை தாமிரபரணி நதியில் யாரும் இனி விடக்கூடாது. மீறி விடுபவர்களுக்கு பாவம் வந்துசேரும். எனவே, இதுகுறித்து மக்கள் மத்தியில் போதிய அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதே போல், குப்பை, கழிவுகளையும் நீர்நிலைகளில் விடக்கூடாது’’ என்றார். முன்னதாக வி.கே.புரம் நகராட்சி குப்பை கிடங்கை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். ஆய்வின் போது கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், விஞ்ஞானி செல்லப்பா, சப்- கலெக்டர் பிரதீப் தயாள், தாசில்தார் வெங்கடேஸ்வரன், தாமிரபரணி கோட்ட உதவி செயற்பொறியாளர் தங்கராஜன், பொறியாளர் மகேஸ்வரன், நகராட்சி ஆணையாளர் காஞ்சனா, பணி மேற்பார்வையாளர் சரவணன், தலைமை எழுத்தர் கணேசன், சுகாதார ஆய்வாளர் மற்றொரு கணேசன், வனச்சரகர் பாரத், வனவர் மோகன், ஆர்ஐ முருகன், விஏஓ தங்ககுமார், உதவியாளர் முத்துகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Tags : Jyotimani ,judge ,Green Tribunal ,Jyotimani Green Tribunal , Numerous pollution, copper water, Justice Jyotimani
× RELATED காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உறுதி...