×

பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: சிவசேனா மற்றும் காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஒரு மனதாக முடிவு... சரத் பவார் ட்விட்

மகாராஷ்ட்டிரா: சிவசேனா மற்றும் காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஒரு மனதாக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத திடீர் திருப்பமாக நேற்று காலை தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது. அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்த மகாராஷ்டிரா கவர்னருக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட அவசர வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் அனைவரும் மும்பையிலுள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள தேசியவாத கட்சியின் எம்.எல்.ஏ அஜித் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன். எப்போதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பேன். சரத் பவார் தான் எங்கள் கட்சியின் தலைவர். பாஜக-தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சியை வழங்கும். இந்தக் கூட்டணி மக்களின் நலனுக்காக பாடுபடும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள சரத் பவார், மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. சிவசேனா மற்றும் காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஒரு மனதாக முடிவு செய்துள்ளது. தவறான மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அஜித் பவாரின் தகவல்கள் உள்ளன என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Tags : BJP ,Congress ,Shiv Sena ,Nationalist , BJP, Shiv Sena, Congress, Sharad Pawar
× RELATED சொல்லிட்டாங்க…