×

உள்ளாட்சி தேர்தலில் நாம் மகத்தான வெற்றியை பெறுவது தான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு செய்யும் மரியாதை: பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் நாம் மகத்தான வெற்றியை பெறுவது தான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு செய்யும் மரியாதை என பொதுக்குழு கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூடியது. இந்த கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாநில சுயாட்சி மற்றும் இருமொழி கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கும் என்பதை வலியுறுத்தியும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவது உட்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், ஈழத்தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ வழிவகை செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆரின் பெயர் சூட்டிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்; தொண்டர்கள் தான் இயக்கத்தின் இதயம். அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை. தமிழ்நாட்டின் ஜீவாதாரண பிரச்சனையான காவேரி பிரச்சனையில் வெற்றி பெற்றுள்ளோம். ஜல்லிக்கட்டில் வரலாற்று புரட்சி படைத்துள்ளோம். எய்ம்ஸ் மருத்துவமனை, 6 மருத்துவ கல்லூரியையும் மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளோம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறு சரிவு ஏற்பட்டது. ஆனால் அது வேலூர் தேர்தலில் சரி செய்யப்பட்டது. இடைத்தேர்தல் வெற்றி மூலம் என்றும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்று மக்கள் காண்பித்துள்ளனர். வலுவாக ஆட்சி நடைப்பெற்று நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் என்ன தேவையோ அதை அளித்து வருகிறோம். நல்லாட்சியில் வெற்றி பெற்ற நாம், உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் ஒற்றுமயுடன் இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் நாம் மகத்தான வெற்றியை நாம் பெறுவது தான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு செய்யும் மரியாதை. இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும் என பொதுக்குழு கூட்டத்தில் பேசினார்.


Tags : CM Jayalalithaa ,victory ,elections ,speech ,O. Panneerselvam ,election ,meeting ,General Assembly ,Jayalalithaa ,O. Pannirselvam , Local election, victory, Jayalalithaa, O. Pannirselvam
× RELATED 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற...