×

சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்களுக்கு நிலக்கல்லில் அடிப்படை வசதி அறவே இல்லை: நோயின் பிடியில் சிக்கும் அவலம்

கம்பம்: சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்களுக்கு நிலக்கல் பார்க்கிங்கில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் சேறும், சகதியும் நிறைந்த
இடத்தில் அமர்ந்து சாப்பிடுவதால் நோயின் பிடியில் சிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டிச.14ம் தேதி முதல் ஜன.20ம் தேதி வரை கேரளாவில் உள்ள சபரிமலையில் ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நடை திறந்திருக்கும். இந்த காலக்கட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். கடந்த 2017ம் ஆண்டு கேரளாவில் பெய்த கனமழையால் பம்பையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வாகனம் நிறுத்தும் இடம் மற்றும் கட்டிடங்கள் சிதைந்து போனது. இதனால் மாற்று ஏற்பாடாக பம்பையை அடுத்துள்ள நிலக்கல் பார்க்கிங்கில் கடந்த 2 வருடங்களாக அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படுகிறது.

நிலக்கல் பார்க்கிங்கில் ஒன்று முதல் 13 வரையிலான செக்டார்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு செக்டாரிலும் அதற்கான ஒதுக்கப்பட்ட மாநில அரசின் பஸ்கள் தனித்தனியாக நிறுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒன்று மட்டும் இரண்டாவது பார்க்கிங் செக்டார்களில் தமிழக ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இஙகு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் தமிழக பக்தர்கள் திண்டாடி வருகின்றனர். நிலக்கல் பார்க்கிங் பகுதி ஓட்டல்களில் தரமான உணவு கிடைக்காததால் ஐயப்ப பக்தர்கள் தங்களுக்கு தேவையான உணவைத் தயார் செய்வதற்காக சமைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களை வாகனங்களிலேயே கொண்டு வருகின்றனர். நிலக்கல் பார்க்கிங் பகுதியில் சமையல் செய்யும்போது, தீயணைப்புத்துறையினர் அதிக கெடுபிடி செய்து சிலிண்டர்களை பறிமுதல் செய்கின்றனர். இதனால் தமிழக பக்தர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

மேலும் நிலக்கல் பார்க்கிங்கில் சமைப்பதற்கான எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லாததால் சமைத்து முடித்த பின்பு நடுரோட்டில் அமர்ந்து சேறும், சகதியும் நிறைந்த சாலையில் அமர்ந்து உணவருந்துகின்றனர். இதனால் தொற்றுநோயால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. நிலக்கல் பார்க்கிங்கில் உள்ள ஓட்டல் உரிமையாளர்கள் தூண்டுதலின் பேரில் சிலிண்டரை போலீசார் தூக்கி செல்வதாக தமிழக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, உணவருந்தும் கூடம் தமிழக செக்டாரில் அமைக்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஐயப்ப பக்தர் மல்லிங்கர் கூறுகையில், ‘‘நான் கடந்த 15 வருடங்களாக இருமுடி கட்டி விரதமிருந்து சபரிமலைக்கு வருகிறேன். ஆனால், தமிழக பஸ் நிற்கும் ஒன்றாம் நம்பர் பார்க்கிங்கில் அடிப்படை வசதி கிடையாது.

தார்ச்சாலை இல்லாமல் மண் சாலையாக உள்ளது. தமிழகத்திலிருந்து வரக்கூடிய ஐயப்ப பக்தர்களுக்கு கேரளா உணவு சேராததால், தங்களது வாகனங்களில் கொண்டு வரும் உணவு பொருட்கள் மூலம் உணவு தயார் செய்கின்றனர். இங்குள்ள ஓட்டல் உரிமையாளர்கள் தூண்டுதலின் பெயரால் சமையல் செய்யும் ஐயப்ப பக்தர்களின் காஸ் சிலிண்டரை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்று விடுகின்றனர். உணவருந்த சிறிய ஷெட் இல்லாமல் அசுத்தம் நிறைந்த பகுதிகளில் சேறும், சகதியுமாய் உள்ள இடத்தில் அமர்ந்து உணவு உண்கிறோம். இந்த நிலை மாற தமிழக அரசு கேரள அரசுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ஒன்றாம் நம்பர் பார்க்கிங்கை செப்பனிட வேண்டும்’’ என்றனர்.

Tags : pilgrims ,Tamil Nadu ,devotees ,Sabarimala ,facilities ,Sabaramalai , Sabarimalai, Tamilnadu devotees, basic facilities
× RELATED உத்திரமேரூர் வேணுகோபாலசாமி கோயிலில்...