×

திருப்பரங்குன்றம் அருகே கிறிஸ்துமஸ் குடில் பொம்மை தயாரிப்பு பணிகள் மும்முரம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள் தயாரிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் 300க்கும் மேற்பட்டோர் பொம்மைகள், அகல் விளக்குகள், சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்றவாறு சுவாமி சிலைகள், அகல் விளக்குகள், கொலு பொம்மைகள், கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள் அகியவற்றை தயாரித்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும் விற்பனைக்காக அனுப்புகின்றனர். வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் வர உள்ள நிலையில் இந்த பகுதியில் தற்போது கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

குழந்தை இயேசு, மாதா, சூசை, ராஜாக்கள், மேய்ப்பர்கள், ஒட்டகம், ஆடு, மாடு, கழுதை ஆகிய 18 வகையான குடில் பொம்மைகளை தயாரிக்கின்றனர். இவற்றை தயாரிக்க பிளாஸ்ட் ஆப் பாரீஸ், காகித கூழ், களிமண், சிமென்ட், எனாமல் பெயின்ட் ஆகியவை பயன்படுத்தபடுகிறது. இங்கு தயாராகும் பொம்மைகளை உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து பார்த்து வாங்கி செல்கின்றனர்.

பொம்மை உற்பத்தியாளர்கள் கூறும்போது, ‘‘மூலப்பொருட்கள், மின் கட்டண உயர்வு போன்ற காரணங்களால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் வரும் ஆண்டுகளில் உற்பத்தி மேலும் குறைய வாய்ப்புள்ளது. எனவே முதல் கட்டமாக பொம்மை தயாரிக்கும் பணியில் உள்ளவர்களுக்கு மின்சார கட்டணத்தில் மானியம் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மூலப்பொருட்களுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும். நவீன தொழில்நுட்பத்தில் பொம்மை செய்ய அரசு பயிற்சி தர வேண்டும்’’ என்றனர்.

Tags : toy maker ,Thiruparankundram Christmas ,Thiruparankundram , Twinkle, Christmas, cottage doll, prep work
× RELATED திருப்பரங்குன்றம் அருகே 16ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு