×

‘பள்ளி செல்ல விரும்பு... பாடமெல்லாம் கரும்பு’..ஆடி, பாடி, அற்புத கதை சொல்லி பாடம் நடத்தும் தலைமையாசிரியர்

மதுரை: கற்பித்தல் முறையை மாணவர்களிடம் எளிமையாக்க பாடங்களை கதை, பாடல், நாடகம், நடிப்பு என பல்வேறு தளங்கள் மூலம் மதுரையில் ஒரு தலைமை ஆசிரியர் கற்றுத் தருகிறார். அத்துடன்  மாணவர்கள் வாசிப்புத்திறனை வளர்க்க நூலகமும் அமைத்து தருகிறார். ‘பள்ளி செல்ல விரும்பு, பாடம் எல்லாம் கரும்பு’ என்று ஒரு காலத்தில் படித்த பாடங்கள் தற்போது அப்படி இல்லை. தமிழக பள்ளிக்கல்வித்துறை 5ம் வகுப்பு முதல் பொதுத்தேர்வு என்பது போல அன்றாடம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு மாணவர்கள் மத்தியில் கல்வி குறித்த பயத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பாடங்கள் குறித்த பயத்தைப் போக்க மதுரையில் ஒரு பள்ளித்தலைமை ஆசிரியர், மிக எளிமையாக பாடங்களை நடத்தி வருகிறார். உடல் மொழி, நாடகம், கதை, பாடல், நடிப்பு என மாணவர்களுக்குப் பிடித்தமான வகையில் பாடங்களை நடத்துகிறார். இதனால் மிக எளிமையான முறையில் மாணவர்கள் பாடங்களைக் கற்றுக் கொள்கின்றனர்.

மதுரை கீழசந்தைப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன். இவர்தான் இப்படி மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகிறார். அவருடைய வகுப்பு என்றால் மாணவர்கள் சுவாரஸ்யமாகி விடுகின்றனர். ஆனால், நாடகமோ, பாடலோ, நடிப்போ அதில் மாணவர்களும் பங்கேற்க வேண்டும்.
இப்படித்தான் கடந்த பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு பாடங்களை சரவணன் கற்றுத் தருகிறார்.  தான் பணியாற்றும் பள்ளியில் மட்டுமின்றி ஏழை, எளிய மக்கள் வசிக்கும் மதுரையின் புறநகர் பகுதிகளில் ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் சரவணனை பார்க்கலாம். அவருக்காக குழந்தைகள் காத்துக் கிடக்கின்றன. குறிப்பாக, சக்கிமங்கலம், சிந்தாமணி, தீர்த்தக்காடு, மேல அனுப்பானடி, கல்மேடு, மேலமடை, பால்பண்ணை, கீழ அனுப்பானடி, பனையூர், கருப்பபிள்ளை ஏந்தல் போன்ற  பின்தங்கிய பகுதி மாணவர்களை அவர்களின் வசிப்பிடப் பகுதிக்குச் சென்று விளையாட்டு கற்றுக் கொடுத்து, பாட்டு பாடி , கதைகள் கூறி , மாணவர்கள் வாசிக்க புத்தகங்கள் வழங்கி கற்பித்தல் மீது ஆர்வர்த்தை ஏற்படுத்தி வருகிறார். இதுவரை 40க்கும் மேற்பட்ட இடங்களில் இப்படியான கதை கூறல் நிகழ்ச்சிகளை சரவணன் நடத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கடந்த 20 ஆண்டுகளாக ஆசிரியர் பணி என்றாலும், 12 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக உள்ளேன். கல்வி போதிக்கும் முறையை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக ஐந்து ஆண்டுகளாக மாணவர்களுக்குப் பிடித்த வகையில் பாடங்களை  கற்பிக்கிறேன். இரண்டு வருடங்களாக நாடகம், விளையாட்டு, விநாடி - வினா, பொது அறிவு கேள்வி- பதில்கள் மூலம் கற்பிக்கத் தொடங்கினேன். இந்த முறை மாணவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் ‘நூல் வனம்’ என்ற அமைப்பு மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஒவ்வொரு பள்ளிகளுக்கும், நூலக வசதி ஏற்படுத்தி, மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தி வருகிறோம். இதுவரை 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

Tags : school ,headmaster , School, Story, Headmaster
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி