×

கண்ணமங்கலம் அருகே இரவில் தெருக்கூத்து, பகலில் மண்பாண்ட தொழிலாளி: அசத்தும் பொறியியல் பட்டதாரி இளைஞர்

கண்ணமங்கலம்: இரவு நேரங்களில் தெருக்கூத்து நாடகங்களில் நடித்தும், பகலில் மண்பாண்டம் செய்தும் தனக்கான சுயதொழில் பாதையை அமைத்து அசத்தி வருகிறார் பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர். தற்போது அனைத்து தரப்பு மக்களும் மண் பாண்டங்கள் மீது ஆர்வம் காட்டி வரும் நிலையில், தங்களது முன்னோர்களின் பாரம்பரிய தொழிலை விரும்பி ஏற்று செய்து வருகிறார் பொறியியல் பட்டதாரி ஒருவர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே குப்பம் கிராமத்தை சேர்ந்த அந்த இளைஞர் பெயர் வினோத்(25). பி.இ. சிவில் இன்ஜினியரிங் படித்த அவர் அதில் புதுமையையும் புகுத்தி அசத்தி வருகிறார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘பி.இ சிவில் பட்டதாரியாக இருந்தாலும், நமது பாரம்பரிய தொழிலை விடக்கூடாது. மண் பாண்டங்களின் பயன்பாடு குறைந்ததால்தான் இன்று பல நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அத்தொழிலையே மேற்கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் இத்தொழிலில் இறங்கியுள்ளேன். சாதாரண பாரம்பரிய சக்கர இயந்திரம் மூலம் நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 அகல் விளக்குகள் மட்டுமே செய்ய முடியும். ஆனால் கிரைண்டர் மோட்டார் மூலம் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் அகல் விளக்குகளை செய்ய முடியும். இந்த ஆண்டு 20 ஆயிரம் அகல் விளக்குகளை செய்து மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உள்ளேன். அதிகளவில் உற்பத்தி வழங்கும்போது விலை குறைவாகவும் வழங்க முடியும்.

அதற்கு அரசு மூலப்பொருளான களிமண் கிடைப்பதில் உள்ள இடர்பாடுகளை நீக்குவதுடன், இத்தொழிலில் இயந்திரத்தை கொண்டு வருவதற்கு ஊக்கமளிக்க வேண்டும்’ என்று கூறும் அவர், ‘நாடக நடிகராக தெருக்கூத்தில் நடித்து மாதத்தில் 15 நாட்களில் கண்விழித்து அதில் வரும் வருவாய் கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறேன்’ என்றும் தெரிவித்தார். திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா அடுத்த மாதம் கொண்டாடப்படும் நிலையில் அதற்கான பணியில் தீவிரம் காட்டி வரும் வினோத்தின் வார்த்தைகளை கேட்டபோது, உழைப்பே உயர்வு தரும், செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமைதான் நமது செல்வம் என்பதற்கு உதாரணமாய், முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாய் திகழும் அவரை தினகரன் நாளிதழும் வாழ்த்துகிறது.

Tags : Anatom ,Kannamangalam ,graduate youth ,pottery worker ,streetcar , Kannamangalam, streetcar, pottery worker, engineering graduate
× RELATED மாணவியிடம் பாலியல் சில்மிஷம் விவசாயி மீது போக்சோ வழக்கு ஆரணி அருகே