×

புவிசார் குறியீடு பெற்றும் பலனில்லை ‘மணக்காத’ மதுரை மல்லி விவசாயம்: அரசும் கைவிட்டதால் விவசாயிகள் பரிதவிப்பு

திருப்பரங்குன்றம்: புவிசார் குறியீடு பெற்ற மதுரை மல்லிகைப்பூ சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். தமிழக அரசும் கைவிட்டதால் மாற்றுத்தொழிலை தேட வேண்டிய நெருக்கடி ஆளாக்கப்பட்டுள்ளனர். அரசு மல்லி விவசாயிகளின் நலனை கருத்தில் கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மல்லிகைப்பூ. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மல்லிகைப்பூ விளைந்தாலும், மதுரை மல்லிகைக்கு என தனி மணமும், அதன் வெண்மையும் முக்கியமானவை. அதேபோல் இங்கு விளையும் மல்லிகைப்பூவும், காம்பும் சம உயரம் இருக்கும். இந்த தன்மைகள் வேறு இடங்களில் விளையும் மல்லிகை பூக்களுக்கு இருப்பதில்லை. இதற்கு காரணம் மதுரை பகுதியில் உள்ள ஒரு வகை செம்மண்ணின் தன்மையாகும். இதனால் மதுரை மல்லிகை உலக அளவில் பல நாட்டு மக்கள் விரும்பி வாங்கும் ஏற்றுமதி தரம் வாய்ந்த பூ வாக உள்ளது. இதனால் தான் மத்திய அரசு மதுரை மல்லிகைக்கு மகடந்த 2012 ல் புவிசார் குறியீடு வழங்கியது.
மதுரை மல்லிகை என்பது மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, ஆகிய பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது.

இப்பகுதியில் விளையும் மல்லிகை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க உலகத்தரமான பொருளை விளைவிக்கும் விவசாயிகள் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களில் மல்லிகைப்பூ விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. குறிப்பாக, வேடர் புளியங்குளம், சூரக்குளம், ஒத்தை ஆலங்குளம், வலையங்குளம், சோளங்குருணி, பரம்புபட்டி, பாரபத்தி, கொம்பாடி, வலையப்பட்டி, எலியார்பத்தி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி நடைபெறுகிறது. பொதுவாக மல்லிகை ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் மகசூல் ஒரு ஏக்கருக்கு 40 கிலோ முதல் 50 கிலோ வரை கிடைக்கும். ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஏக்கருக்கு 5 முதல் 10 கிலோ மட்டுமே கிடைக்கும். இத்தகைய விவசாயிகள் தங்களுக்கு அரசின் உதவிகள் முழுமையாக கிடைக்கவில்லை; மல்லிகை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை எனவும், இதனால் இனிவரும் காலங்களில் மல்லைகை விவசாயம் அழியும் நிலைக்கு செல்வதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து சோளங்குருணியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணன் கூறுகையில் ‘‘மல்லிகையை பொறுத்தவரையில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் உள்ள சில ஊர்களிலும் பயிரிடப்படுகிறது. ஆனால் மதுரை மல்லிகைக்கு மட்டுமே விசேஷமான மணம் உண்டு. இதற்கு இப்பகுதி மண்ணின் தன்மையே காரணம். மேலும் இப்பகுதியிலம விளையும் மல்லிகை நாற்றுகள் ராமேஸ்வரம் பகுதியில் மட்டுமே பதியம் போடப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்துதான் அனைத்து ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இத்தகைய மல்லிகை விவசாயத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மல்லிகையில் வரக்கூடிய பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு என பிரத்யேக பூச்சி மருந்துகள் இல்லை. இதனால் காய்கறி பயிர்களுக்கு தெளிக்கும் மருந்துகளையே இதற்கும் பயன்படுத்துகிறோம். பொதுவாக சாதாரண நாட்களில் கிலோ ரூ.100ல் இருந்து ரூ.200 வரையும் சீசன் காலங்களில் ரூ.500 முதல் ரூ.800 வரையும் விலைக்கு பூக்கள் விற்கும். ஆனால் தற்போது வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் வற்ட்சி காரணமாகவும் மல்லிகை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மல்லிகைக்கு என விமான நிலையம் அருகில் குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும். மேலும் இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மல்லிகை செண்ட் தயாரிப்பு தொழிற்சாலையையும் அமைக்க வேண்டும்’’ என்றார்.


விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தருவோம்

திருப்பரங்குன்றம் வட்டார தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “இப்பகுதியில் 1,100 ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக விவசாயிகள் உரக்கடை உரிமையாளர்களை மட்டுமே நம்புகின்றனர். தோட்டக்கலை துறையிடம் ஆலோசனை பெறுவதில்லை. மல்லிகை நடவில் 3 முதல் 4 அடி இடைவெளியை பின்பற்றுவதில்லை. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் முறையாக காவாத்து செய்வதில்லை. மேலும் அரசு மாணிய விலையில் மல்லிகை நாற்றுகள் விற்பனை செய்கிறது. மல்லிகை சாகுபடியில் சொட்டு நீர்ப்பாசனத்திற்கு 100 சதவீதம் மாணியம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட மல்லிகை சாகுபடி அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை செய்யவும் தோட்டகலை துறை தயாராக உள்ளது’’ என்றார்.

Tags : Mankadu , Geological code, Madurai Malli, Farmers
× RELATED பாலியல் தொல்லையால் மாங்காடு பள்ளி...