×

கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் வெங்காய பயிர்களில் களையெடுக்கும் பணி தீவிரம்

கோவில்பட்டி: வெங்காய பயிர்களின் ஊடே வளர்ந்துள்ள களையை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு, எட்டயபுரம் வட்டார கிராமங்களில் நடப்பாண்டு புரட்டாசி மாத ராபி பருவத்தில் விவசாயிகள் மானாவாரியில்  உளுந்து, பாசிப்பயறு, கம்பு, சோளம், மக்காச்சோளம், வெங்காயம், மிளகாய், பருத்தி உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகளை பயிரிட்டுள்ளனர். இதில் சுமார் 60 ஆயிரம் ஏக்கரில் பெரும்பாலான விவசாயிகள் வெங்காயத்தை தனியாகவும், மிளகாய் செடிகளுடன் ஊடுபயிராகவும் பயிரிட்டுள்ளனர்.  ஏக்கருக்கு சுமார் 100 கிலோ வெங்காய விதைகளை ஊன்றி பராமரித்து வருகின்றனர்.  திருச்சி மாவட்டம் முசிறி, துறையூர் போன்ற பகுதிகளில் இருந்து வெங்காய விதைகளை கிலோ ரூ.70க்கு கொள்முதல் செய்து பயிரிட்டுள்ளனர்.

தற்போது மழை பெய்து வருவதால் சிலநோய் தாக்குதல் தவிர வெங்காய பயிர்கள் நன்றாக வளர்ந்து காணப்படுகிறது. பயிர்களுக்கு ஊடே வளர்ந்துள்ள களையை அகற்றும்  பணிகளில் விவசாயிகள், பெண் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
   விவசாய பணிகளை மேற்கொள்வதற்கான பணமின்றி விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். வங்கிகள் மூலம் விவசாய கடன் தருவதில் அதிகாரிகள் காலதாமதித்து வருவதால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். விவசாய கடன் தருவதற்கு பல்வேறு காரணங்களை அதிகாரிகள் தெரிவிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

 தூத்துக்குடியில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், கலெக்டர் சந்தீப்நந்தூரி விவசாய கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி, அவர்களின் பட்டா மூலம் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடன் வழங்க அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தினார். ஆனால் எந்த வங்கியும் விவசாய கடன் அட்டை வைத்துள்ள பெரும்பாலான விவசாயிகளுக்கு கடன் தரவதில்லை. மேலும் இந்த வட்டாரத்தில் உள்ள  விவசாயிகள் பெரும்பாலானோருக்கு விவசாய கடன் அட்டைகளும் வழங்கப்படவில்லை.

இதனால் விவசாயிகள் தனியாரிடம் வட்டிக்கு கடன் பெற்றும், நகைகளை அடகு வைத்தும் விவசாய பணிகளை செய்து வருகின்றனர். எனவே அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய கடன் அட்டைகளை வழங்கி, வங்கிகள் மூலம் விவசாய கடன் வழங்கவும், கடந்த 2018-19ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்கவும், நடப்பாண்டில் பயிர் காப்பீடு செய்வது குறித்து இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலை அதாவது காப்பீடு செய்வதற்கான பிரீமிய கட்டணத்தை உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அரசு அறிவிக்கவேண்டும் என மானாவாரி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tags : Onion Crops ,Kovilpatti ,Valathikulam , Weeding Intensification of Onion Crops in Kovilpatti, Valathikulam
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!