×

தமிழகத்தில் நடப்பாண்டில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

மேட்டூர்:  தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு பட்டய கணக்காளர் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கொளத்தூர் தனியார் பள்ளியில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ -மாணவியருக்கு பட்டய கணக்காளர் படிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: இந்தியாவில் வேறு மாநிலங்களில் இல்லாத வகையில், அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 25 ஆயிரம் பேருக்கு, சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் பயிற்சி நடப்பு ஆண்டில் வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் 10 லட்சம் பட்டய கணக்காளர் தேவை என்ற நிலையில், தற்போது 2.85 லட்சம் பட்டய கணக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இப்பயிற்சியின் மூலம் எதிர்கால தேவையை அரசு பள்ளி மாணவ, மாணவியர் பூர்த்தி செய்வார்கள். இதன் மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுவதோடு, மாதம் 5 லட்சம் வரை வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு விஞ்ஞான ரீதியிலான கல்வி கிடைக்கும் வகையில், தமிழக அரசு இதுவரை 48 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கி உள்ளது. டிசம்பர் இறுதிக்குள் 92 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும். தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு முன்னுரிமை அளித்து 28 ஆயிரத்து 750 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் அவர் கூறுகையில், ‘நடப்பாண்டில் 21,000 அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பிளஸ் 2 பாடத்திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பாடத்திட்டங்கள் இடம்பெற்றிருப்பதால், அரசு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்,’ என்றார்.



Tags : Accountant ,Senkottaiyan ,Minister ,Tamil Nadu ,Chartered Accountant , Tamil Nadu,students,Training, Minister Sengottaiyan
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...