தடையில்லா மின்சாரம் விநியோகிக்க 58 கோடியில் அலுமினியம் பவர் கேபிள்: தமிழக மின்வாரியம் வாங்க திட்டம்

சென்னை:  தடையில்லாமல் மின்சாரத்தை விநியோகிக்கும் வகையில் ரூ.58 கோடி செலவில் அலுமினியம் பவர் மின்கேபிளை வாங்குவதற்கு மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் 2.90 கோடிக்கும் மேலான மின்இணைப்புகள் உள்ளன. மேலும் புதிய மின்இணைப்பு கேட்டு ஏராளமானோர் தினசரி விண்ணப்பித்து வருகின்றனர். இவ்வாறு உள்ள மின்இணைப்புகளுக்கான மின்சாரத்தை, வாரியம், கம்பங்களின் மூலமாகவே அதிக அளவில் சப்ளை செய்கிறது. இந்த கம்பங்கள் இயற்கை சீற்றங்களின் போது எளிதாக சேதமடைந்து விடுகின்றன. இந்த பாதிப்பானது தமிழகத்தில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிமாக இருக்கிறது. வர்தா புயல் வீசிய போது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியில், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான மின்சாதனங்கள் சின்னாபின்னமானதாக கூறப்பட்டது. இதேபோல், ஒக்கி புயல் வீசிய போது, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் மின்சாதனங்கள் பாதிப்படைந்தன.

அப்போது ரூ.230 கோடிக்கும் அதிகமான சாதனங்கள் சேதமடைந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து வீசிய, கஜா புயலால் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2,000 கோடி ரூபாய்க்கு மேலான மின்சாதங்கள் சேதமடைந்ததாக கூறப்பட்டது.இவ்வாறு அடுத்தடுத்து வீசும் புயல்களின் காரணமாக வாரியத்திற்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மின்விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு, நீண்ட நாட்கள் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்தனர். இதேபோல் துணைமின்நிலையங்களிலிருந்து நீண்ட தூரத்தில் உள்ள மின்இணைப்புகளுக்கு மின்சாரம் கொண்டுசெல்வதால், மின்இழப்பும் ஏற்படுகிறது. எனவே கம்பங்களை தவிர்த்து, தரைவழி மின்கேபிள்களை அதிக அளவில் பதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி ஒவ்வொரு பகுதிகளாக தரைவழி மின்இணைப்புகள் கொடுப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இதன்ஒருபகுதியாக அலுமினியம் பவர் மின்கேபிள்களை 380 கி.மீ அளவுக்கு மின்வாரியம் வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.58 கோடி செலவு செய்வதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின்சாரத்தை தரைவழியில் கொண்டுசெல்வதன் மூலம் மின்இழப்பு, இயற்கை சீற்றங்களின் போது ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும். அதன்படி அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு தரைவழி கேபிள்களை பதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்ஒருபகுதியாக அலுமினியம் பவர் கேபிளை 380 கி.மீ அளவுக்கு வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கேபிளானது துணை மின்நிலையங்களில் இருந்து பில்லர்பாக்ஸ் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு மின்சாரத்தை கொண்டுசெல்வதற்கு பயன்படும். அவ்வாறு பில்லர் பாக்ஸ்களுக்கு மின்சாரம் சென்ற பிறகு, அங்கிருந்து வீடுகள், தொழிற்சாலை, கடை போன்வற்றிற்கு இணைப்பு கொடுக்கப்படும். இந்த முறையில் மின்இணைப்பு கொடுப்பதால் இயற்கை சீற்றங்களின்ேபாது ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

துணைமின்நிலையங்கள் நவீனமயம்
மின்சாரம் உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து துணைமின்நிலையங்களுக்கு மின்சாரம் கொண்டுவரப்படும். இங்கிருந்து இணைப்புகளுக்கு அனுப்பப்படும். எனவே மின்விநியோகத்தில் இவற்றின் பங்கு முக்கியமான ஒன்றாகவுள்ளது. இவ்வாறு உள்ள துணைமின்நிலையங்களில், ஒருசிலவற்றில் பல்வேறு சாதனங்கள் பழமையானதாக இருக்கிறது.  தற்போது அதை நவீனமயமாக்கும் பணியில் மின்வாரியம் தீவீரம் காட்டி வருகிறது. இதேபோல் ரூ.3,400 கோடி செலவில் காங்கேயம் அருகில் புதிய துணைமின்நிலையம் அமைக்கும் பணி 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது. இதன் கட்டுமானப்பணி தற்போது நிறைவடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Electricity, Aluminum Power Cable, Tamil Nadu Power Station
× RELATED உத்தமபாளையத்தில் முன்னறிவிப்பின்றி...