போராட்டங்களில் ஈடுபடுவதை வழக்கறிஞர்கள் தவிர்க்க வேண்டும்: ஐகோர்ட் நீதிபதி பேச்சு

சென்னை: போராட்டங்களில் ஈடுபடுவதை வழக்கறிஞர்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு பேசினார். திருவள்ளூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், புதிதாக ரூ.19.12 கோடியில் சுமார் 8 ஆயிரம் சதுர அடியில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இணைப்புக் கட்டிடம் மற்றும் ரூ.5.52 கோடியில் நீதிபதிகளின் குடியிருப்புகள் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் முன்னிலை வகித்தார்.விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு கலந்துகொண்டு, புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.அவர் பேசுகையில், ‘‘வழக்கறிஞர்கள் வாதிடும்போது முழுத்திறனையும் வெளிப்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் குறுக்கு வழிகளில் அணுகக் கூடாது. நீதிமன்றங்களில் வழக்குகளை திசை மாற்றுவதையும், தேவையில்லாமல் வாதிடுவதையும் தவிர்க்க வேண்டும். வழக்கறிஞர்கள் போராட்டங்களில் ஈடுபடும்போது, பொதுமக்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், வழக்கறிஞர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். நீதிமன்றங்கள் மட்டும் இணைந்தால் போதாது. நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்கள் ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து, உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் பேசுகையில், ‘‘வழக்கறிஞர்கள் எவ்விதமான புகாருக்கும் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபடாமல், தொழிலை தெய்வமாக நினைத்து செயல்பட வேண்டும்’’ என்றார்.விழாவில், எஸ்.பி., அரவிந்தன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சரஸ்வதி, வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் ஆர்.தாமோதரன், வி.முரளி, கே.ஜி.புருஷோத்தமன், ஆர்.ரகுபதி, எஸ்.கே.ஆதாம், கே.கார்த்திக், எம்.நித்தியானந்தம், டி.ஜான்பால் உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில், குற்றவியல் முதன்மை நீதிபதி ஜா நன்றி கூறினார்.

Related Stories:

>