×

இலங்கை அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ம்தேதி டெல்லியில் ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு

சென்னை: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ம் தேதி டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார்.இதுகுறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கை தீவில், லட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த அதிபர் மகிந்த ராஜபக்சேயின் ராணுவ அமைச்சராக இருந்த ஈவு இரக்கம் அற்ற கோத்தபய, இப்போது இலங்கை அதிபர் ஆகி இருக்கிறார், முன்னாள் அதிபரை பிரதமராக அறிவித்து, அவரிடமே ராணுவப் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டார்.சிங்களர்களால்தான் நான் வெற்றி பெற்றேன் என்றதுடன், முதல் அறிவிப்பாக, தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் தெருக்களில் வலம் வர வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்து விட்டார். தமிழ் ஈழம் சிங்களர்களின் ராணுவக் கூடாரம் ஆகி விட்டது,காணாமல் போன தமிழர்களின் கதி என்ன, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் தமிழர்களின் கதி என்ன என்ற வேதனை நம்மை வாட்டுகிறது.

இந்நிலையில் வரும் 28ம் தேதி கோத்தபய டெல்லி வருகிறார் எனவே, தமிழ்ச் சாதி, நாதி அற்ற இனம் அல்ல என்பதை, உலகத்திற்குப் பிரகடனம் செய்யும் வகையில், வருகிற 28ம் தேதி  காலை 11 மணிக்கு, என்னுடைய தலைமையில், மதிமுக சார்பில், டெல்லி ஜந்தர் மந்தரில், ஈழத்தமிழ் இனக் கொலைகாரனே, இந்தியாவுக்குள் நுழையாதே என்ற முழக்கத்துடன், அறவழியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.கட்சி தொண்டர்கள், இந்த குறைந்த கால அவகாசத்தில் வர முடிந்தவர்கள், டெல்லிக்கு வாருங்கள். குண்டடிபட்டுக் கொத்துக்கொத்தாக மடிந்து போன ஈழத்தமிழர்களுக்காக கண்ணீர் சிந்துகின்ற நாம், நம் அறப்போரை மேலும் கூர்மை ஆக்குவோம். ஈழத்தமிழ் உணர்வாளர்கள் இந்த அறப்போரில் பங்கேற்பதோடு, நாங்கள் மேற்கொள்ள இருக்கிற அறப்போராட்டத்திற்கு தமிழ்ச் சமூகம் தோள் கொடுத்துத் துணை நிற்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : protests ,Delhi ,VIICO ,Coming ,Announcements ,President ,Vigo ,Sri Lankan , Protest , Sri Lankan President,Delhi, Vigo
× RELATED எதிர்ப்பு அலையால் மக்களை...