×

குடந்தையில் பலத்த காற்றுடன் மழை மரம் முறிந்து ரயில் மீது விழுந்தது: பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

கும்பகோணம்: குடந்தையில் இன்று அதிகாலை பலத்த காற்றுடன் மழை கொட்டியது. அப்போது தண்டவாளம் அருகே உள்ள ஒரு மரம் முறிந்து ரயில் இன்ஜின் மீது விழுந்தது. இதில் இன்ஜின் கண்ணாடிகள் உடைந்தது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய நிலையில் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதன் பின்னர் கடந்த 20 நாட்களாக பலத்த மழை எதுவும் பெய்யாமல், ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்து வந்தது. காவிரியில் தண்ணீர் தட்டுப்பாடின்றி வருவதால் டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்பதால் யாரும் மழையை பெரிதாக எதிர்பார்க்கவும் இல்லை. அதே நேரத்தில் பனிப்பொழிவு ஆரம்பித்து விட்டது.

இனிமழை பெய்யாது என நினைத்திருந்த நிலையில் கடந்த 3 தினங்களாக திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுகை மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யத்தொடங்கி உள்ளது. அதுவும் கனமழையாக கொட்டுகிறது. இன்றுடன் 3வது நாளாக டெல்டா மாவட்டங்களில் வெயில் தென்படாத அளவுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் பரவலாக நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்தது. நேற்றும் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருந்தது. மீண்டும் 3வது நாளாக இன்றுகாலை தஞ்சை, கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கும்பகோணம் பகுதியில் நேற்று விடிய விடிய மழை பெய்தது. இன்று அதிகாலை இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்துகொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில்கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அதிகாலை 4.42 மணிக்கு இந்த ரயில் கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள நரசிங்கம்பேட்டை என்ற இடத்தில் வந்தபோது திடீரென தண்டவாளம் அருகே உள்ள ஒருபெரிய வேப்பமரத்தின் பெரிய கிளை முறிந்து ரயில் இன்ஜின் மீதுவிழுந்தது. இதில் இன்ஜினின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்தது. இதன் வழியாக மழை நீர் டிரைவர்கள் இருக்கும் பகுதியில் வழிந்துகொண்டிருந்தது. இந்த கிளை பயணிகள் பெட்டியில் விழுந்திருந்தால் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக இன்ஜின் மீது விழுந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடைந்த கண்ணாடியுடன் ரயிலை கும்பகோணம் ரயில்நிலையம் கொண்டு சென்று ரயிலை நிறுத்தினர்.

தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் உடைந்த கண்ணாடியுடன் செல்ல முடியாது என்பதால் தஞ்சையில் இருந்து வேறு இன்ஜின் வரவைழக்கப்பட்டது. கண்ணாடி உடைந்த இன்ஜின் மாற்றப்பட்டு, புதிய இன்ஜின் பொருத்தப்பட்டு மீண்டும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் அந்த ரயில் கும்பகோணத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் சென்னையில் இருந்து தஞ்சைக்கு உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துகொண்டிருந்ததால் அதை குத்தாலத்தில் நிறுத்திவைக்கும்படி அதிகாரிகள் தகவல் அனுப்பினர்.

அதன்படி உழவன் எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் குத்தாலத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்தியோதயா கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டதும் உழவனும் குத்தாலத்தில் இருந்து கிளம்பியது. இதனால் அந்த ரயிலும் சுமார் 1 மணி நேரம் தாமதமாக தஞ்சை வந்தடைந்தது. முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு(மி.மீ) வருமாறு:நாகை 80.8, திருப்பூண்டி 36.4, திருத்துறைப்பூண்டி 19.1, கும்பகோணம் 36.2, வலங்கைமான் 10.6, குடவாசல் 13.6, நன்னிலம் 33.2, மயிலாடுதுறை45, மஞ்சளாறு 902, மயல்மேடு 41.6, கொள்ளிடம் 41.6, சீர்காழி 39.6, தஞ்சை2.5, மதுக்கூர் 5.8, மன்னார்குடி 3 திருச்சி டவுன் 1.2, கல்லணை 3, சமயபுரம் 3, துவாக்குடி 4, பூதலூர் 4.8.

Tags : passengers , Kundanai, with heavy wind, rain, tree fell, train, fell
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...