×

பிளாஸ்டிக் கயிறு வருகையால் சிங்கம்புணரியில் தென்னை நார் கயிறுகள் தேக்கம்: தொழிலாளர்கள் கவலை

சிங்கம்புணரி: பிளாஸ்டிக் கயிறு வருகையால் சிங்கம்புணரி பகுதியில் தென்னைநார் கயிறு விற்பனையின்றி தேக்கமடைந்துள்ளன. இதனால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் கயிறு தயாரிக்கும் தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. இத்தொழிலில் 90 சதவீதம் பெண்களே ஈடுபட்டுள்ளனர். சிங்கம்புணரி மற்றும் சுற்று கிராமங்களான பிரான்மலை, கோபாலச்சேரி, வேங்கைபட்டி, கோவில்பட்டி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கயிறு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சிறிய அளவிலான கொச்சை கயிறு முதல் பெரிய தேர் வடக்கயிறு வரை தயாரிக்கப்பட்டு வெளியூர், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

பிளாஸ்டிக் கயிறு வருகையாலும், மூலப்பொருட்களின் பற்றாக்குறையால் விலை உயர்வு காரணமாக தென்னை நார் கயிறு தொழில் சரிவை சந்தித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து பரம்பரை கயிறு உற்பத்தியாளர் கணபதி கூறுகையில் ‘தென்னை நார் கயிறு என்றாலே சிங்கம்புணரிதான். இங்கு தயாரிக்கப்படும் கயிறுகள் நல்ல முறுக்குடனும் உறுதியுடனும் இருக்கும். தென்னைநார் கயிறு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க கடந்த 2013ம் ஆண்டு காளாப்பூர் பகுதியில் மத்திய மாநில அரசுகள் மற்றும் தனியார் பங்களிப்புடன் காயர் கிளஸ்டர் தொடங்கப்பட்டது. இந்த காயர் கிளஸ்டரிங் நாளொன்றுக்கு 55 டன் தென்னை நார் கயிறுகள் தேவைப்படும் என தெரிவித்தனர்.

இதனால் இப்பகுதி கயிறு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மேம்படும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இந்த கிளஸ்டரால் இப்பகுதி மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மேலும் இங்கு மத்திய அரசின் கயிறு வாரிய கிளை அலுவலகம் தொடங்கப்பட்டு பல்வேறு சலுகைகள், வங்கி கடன் கிடைத்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த அலுவலகம் தஞ்சாவூருக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி கயிறு தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தொழிலை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் கயிறுகள் வருகையால் தென்னை நார்க்கழிவு தேவை குறைந்தது. இதனால் கயிறுகள் விற்பனையாகாமல் மாதக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் நிலை உள்ளது. கயிறு கூட்டுறவு சங்கம் மூலம் கயிறுகளை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : rope arrival ,arrival , Plastic rope, cigar fiber rope, stagnation , arrival
× RELATED புதன்சந்தைக்கு மாடுகள் வரத்து சரிவு