ஆழ்வார்குறிச்சி அருகே குண்டும், குழியுமான சாலையில் தேங்கிய நீரில் நாற்றுநட்டு போராட்டம்

கடையம்: ஆழ்வார்குறிச்சி அருகே அழகப்பபுரத்தில் குண்டும், குழியுமான சாலையில் தேங்கிய நீரில் நாற்றுநட்டும், துணி துவைத்தும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆழ்வார்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது அழகப்பபுரம். இக்கிராம மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும். இந்த பகுதியில் உள்ள கடனாநதி அணை செல்லும் பிரதான சாலை, சுமார் 15 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் சிதலமடைந்து கிடக்கிறது. இந்த சாலையை சம்பன்குளம், கோவிந்தபேரி, கல்யாணிபுரம், கடையம் மற்றும் ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது சாலை முழுவதும் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் அழகப்பபுரம் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி குட்டைகளாக மாறியுள்ளன. இதில் தேங்கிய தண்ணீரில் அப்பகுதி மக்கள் நாற்று நட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் தேங்கிய நீரில் துணி துவைத்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

Related Stories:

>