×

2500 ஏக்கர் பாசனம் பெறும்: குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது: துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்

கோபி: கடந்த 40 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் குண்டேரிப்பள்ளம் அணையில் குறைந்தளவே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குன்றி மலையடிவாரத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது. 42 அடி உயரமுள்ள இந்த அணைக்கு குன்றி, விளாங்கோம்பை, மல்லியதுர்கம் உள்ளிட்ட பகுதியில் பெய்யும் மழை நீர் 10க்கும் மேற்பட்ட காட்டாறுகள் மூலம் தண்ணீர் வருகிறது. இந்த அணையால், குண்டேரிப்பள்ளம், கொங்கர்பாளையம், வாணிபுத்தூர், மோதூர், விநோபாநகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2,500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அணை கட்டப்பட்டு 40 ஆண்டு ஆன நிலையில் இதுவரை ஒருமுறை கூட அணை தூர்வாரப்படவில்லை.

அணைக்கு வனப்பகுதியில் உள்ள காட்டாறுகள் மூலமாக தண்ணீர் வருவதால் அதிகளவு வண்டல் மண், சேறு, மணல் அதிகரித்து தற்போது சுமார் 25 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் ஓரிரு நாள் பெய்யும் மழைக்கே அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையே உள்ளது. கடந்த ஒரு மாதமாக அணை நிரம்பி உள்ள நிலையில், அணைக்கு வரும் உபரிநீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. நீர்பிடிப்பு பகுதியில் நேற்று பெய்த மழையால் அணைக்கு வரும் உபரிநீர் 500 கன அடி வெளியேற்றப்படுகிறது.

இதனால் அணையை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பகுதியை விவசாயிகள் கூறுகையில், ‘‘40 ஆண்டுகளாக அணை தூர்வாரப்படாத நிலையில் அணையில் குறைந்த அளவே தண்ணீர் தேக்க முடிகிறது. அணையை தூர்வாரினால் இரண்டு ஆண்டுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. மேலும், வன விலங்குகளும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சமவெளி பகுதிக்குள் வராமல் இருக்கும். தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் வன விலங்குகளால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய விளைபொருட்கள் மற்றும் மனித உயிர் பலி நடைபெறாமல் தடுக்க முடியும். இதனால் அரசு, அணையில் தண்ணீர் குறையும் காலங்களில் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


Tags : Gunderippallam ,dam ,Kunderippallam , 2500 acres of irrigation, Kunderippallam dam, filled
× RELATED பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்