திருவெறும்பூரில் மக்கள் ஆவேச போராட்டம்: ஆற்றங்கரையில் குப்பை கொட்ட வந்த மாநகராட்சி லாரி சிறைபிடிப்பு

திருவெறும்பூர்: திருவெறும்பூரில் ஆற்றங்கரையில் குப்பை கொட்ட வந்த மாநகராட்சி லாரியை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவெறும்பூர் பகுதியில் உள்ள 5 வார்டுகளில் தினமும் சுமார் 4 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் லாரியில் ஏற்றப்பட்டு திருவெறும்பூர் உய்யகொண்டான் வாய்க்கால் கரை ஓரங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், அப்பகுதியில் தூர்நாற்றதம் வீசுவதால் 65வது வார்டு மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து புகார் கொடுத்தும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு உய்யகொண்டான் கரை ஓரம் கொட்டப்பட்டிருந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது. இதனால் முதியவர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதியடைந்தனர். இதனால் மக்கள் ஆத்திரமடைந்தனர். இந்நிலையில் மாநகராட்சி குப்பை லாரி இன்று காலை வழக்கம் போல் அந்த இடத்தில் குப்பை கொட்ட வந்தபோது பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆற்றங்கரையில் குப்பை கொட்டக்கூடாது, கொட்டிய குப்பைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும், கடந்த 30ம் தேதியில் இருந்து திருவெறும்பூரில் வணிக நிறுவனங்களிடம் குப்பைகள் பெறப்படுவதில்லை. மீண்டும் வழக்கம்போல் குப்பைகளை வாங்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர். இதை மாநகராட்சி அதிகாரிகள் ஏற்றதால், மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் திருவெறும்பூர் -துப்பாக்கி தொழிற்சாலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Thiruverumpur ,River , In Thiruverumpur : People and the Struggle: On the River, Trash
× RELATED ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக...