×

மகாராஷ்டிராவில் நடந்துள்ள அரசியல் ரீதியான அருவருப்பை அநாகரிகம் என்பதா? அசிங்கம் என்பதா? மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியில் உட்கார்ந்திருப்பதை என்ன பாணி அரசியல் என்பது? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதனை பாரதிய ஜனதா கட்சியின் சித்து விளையாட்டு என்பதா? என்றும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜனதா 105, சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்க இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த போதிலும், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக பா.ஜனதா உடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது.

இந்நிலையில், முந்தைய சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்ததால் கடந்த 12ம் தேதியன்று மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பாஜவை ஒதுக்கி விட்டு, 54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசுடன் புதிய கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்துள்ளது.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஜனநாயகத்தின் முகத்தின் கரி பூசப்பட்டுள்ளதாகவும், இது மாபெரும் வெட்கக்கேடு என்று கடுமையாக சாடியுள்ளார். அரசியல் சட்ட நெறிமுறைகளையே காலில் போட்டு மிதித்து குப்பை தொட்டியில் வீசியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ஸ்டாலின், ஆளுநரை தலையாட்டி பொம்மையாக்கி பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ளதாக விமர்சனம் செய்தார். மகாராஷ்டிராவில் நடந்துள்ள அரசியல் ரீதியான அருவருப்பை அநாகரிகம் என்பதா? அசிங்கம் என்பதா? என்று மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.


Tags : act ,Maharashtra ,MK Stalin ,Congress ,Nationalist ,DMK ,Devendra Patnais ,Ajit Pawar , Maharashtra, Nationalist Congress, Devendra Patnais, Ajit Pawar, Maratha Politics, DMK leader, MK Stalin
× RELATED பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!