×

காரைக்குடி நகராட்சி பகுதியில் பாதாளச்சாக்கடை பணி திடீர் நிறுத்தம்

*பள்ளங்களில் வழுக்கி விழும் மக்கள்

காரைக்குடி : காரைக்குடி நகராட்சி பகுதியில் நடந்து வந்த பாதாளச்சாக்கடை திட்ட பணிகள் திடீரென நிறுத்தப்பட்டதால் தோண்டிய குழிகளில் மக்கள் வழுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரைக்குடியில் பாதாளச்சாக்கடை திட்டம் 2016ம் ஆண்டு பிப்.29ம் தேதி பூமிபூஜை போடப்பட்டு ஏப்ரல் மாதம் பணிகள் துவங்கப்பட்டன. இதற்கான சுத்திகரிப்பு நிலையம் ரஸ்தா பகுதியில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை சுற்றி குடியிருப்புகள் உள்ளதால் இதற்கு பசுமை தீர்ப்பாயத்தில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தடை வாங்கியதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டு வழக்கு நடந்தது வந்தது.

இந்நிலையில் காரைக்குடி நகராட்சிக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவு வந்ததை தொடர்ந்து திட்டப்பணிகள் மீண்டும் 2017ம் ஆண்டு மே மாதம் துவங்கப்பட்டன. இத்திட்டத்திற்கு அரசு 112 கோடியே 53 லட்ச ரூபாய் ஒதுக்கி உள்ளது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து நபர் ஒருவருக்கு தினமும் 115 லிட்டர் கழிவுநீர் என கணக்கிடப்பட்டு கழிவுநீர் சேகரிப்பு குழாய்கள் அமைக்கப்பட உள்ளது.கழிவுநீர் சேகரிக்க 5559 ஆள்நுழைவு தொட்டிகளும், 151.525 கி.மீ நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட உள்ளன.

31 ஆயிரத்து 725 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இணைக்கப்பட உள்ளன. 100 மீட்டர் நீளத்திற்கு கழிவு நீருந்து குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. கழிவுநீர் தேவகோட்டை ரஸ்தா சாலையில் உள்ள நகராட்சி குப்பைக்கிடங்கிற்கு எதிரே அமைக்கப்பட உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல திடமிடப்பட்டு பணிகள் நடந்துவருகிறது. 16 எம்எல்டி கழிவுநீர் சுத்திகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணி ஆமை வேகத்தில் நடந்ததால் தெருக்கள் முழுவதும் பள்ளங்களாக மக்கள் நடக்ககூட முடியாத நிலை இருந்தது வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பணிகள் நிறுத்தப்பட்டு பணிகள் பாதியோடு கிடப்பில் போடப்பட்டுள்ளன. புதிதாக பணிகள் நடக்கவில்லை. மழை பெய்துவருவதால் சாலையில் உள்ள பள்ளங்களில் மக்கள் வழுக்கி விழுவது வாடிக்கையாகி வருகிறது. பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் செல்லக்கூட முடியாத அளவில் மோசமாக உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ``பாதாளச்சாக்கடை திட்டப்பணிகள் துவங்கப்பட்டு வீதி முழுவதும் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் இன்னும் தொட்டிகள் கட்டப்படவில்லை. சாலை முழுவதும் பள்ளங்கள் உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மழைநேரத்தில் நடந்து செல்வோர் வழுக்கி பள்ளங்களில் விழுந்து காயமடையும் சம்பங்களும் நடந்து வருகிறது. ஏற்கனவே ஆமை வேக பணியால் 3 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பணி முடிய இன்னும் சில ஆண்டுகளாகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

குடிநீர் குடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெகநாதன் கூறுகையில், ``மழையால் தண்ணீர் தெருக்களில் தேங்குவதால் பணி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும், வஉசி தெருவில் பணி நடந்து வருகிறது. செக்காலை ேராட்டில் விரைவில் பணி துவங்கும். இத்திட்டம் விரைவில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று கூறினார்.

Tags : ceasefire operation ,municipality ,Karaikudi ,People Suffering Lot , karaikudi ,karaikudi muncipality,Underground Sewage Work
× RELATED பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு