வெளியுறவு அமைச்சகம் புது விளக்கம் சாமியார் நித்தியானந்தா வெளிநாடு தப்பினாரா?

அகமதாபாத்: பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யோகினி சவாஜ்னா பீடம் ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது.  இதையடுத்து, அங்கு சோதனை நடத்திய அகமதாபாத் போலீசார், குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுவர், சிறுமியரை கடத்தி சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளதாக சாமியார் நித்தியானந்தா மீது கடந்த புதன்கிழமை குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நித்தியானந்தாவின் ஆசிரமத்தை நிர்வகித்து வந்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

நித்தியானந்தாவுக்கு எதிராக கர்நாடகாவில் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டதும், அவர் நாட்டை விட்டு தப்பி விட்டார். இந்நிலையில், நித்தியானந்தாவை பிடிக்க வெளியுறவு அமைச்சகத்தின் உதவியை குஜராத் போலீசார் கேட்டுள்ளனர். இந்நிலையில், வெளியுறவுத் துறையின் செயலாளர் ரவிஷ் குமார் கூறுகையில், ‘நித்தியானந்தா வெளிநாடு சென்றதாக காவல் துறையிடம் இருந்தோ அல்லது மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்தோ எங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை,’’ என்றார்.

‘இமயமலையில்  இருக்கிறேன்’

தன் மீதான குற்றச்சாட்டு குறித்து நித்தியானந்தா தனது பேஸ்புக்  பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘எனது அனைத்து குரு குலத்திலும் தங்கியுள்ள குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் எப்போது வேண்டுமானாலும் பார்த்து பேசலாம். அதற்காக, குருகுலங்கள் எப்போதும் திறந்தே இருக்கிறது. நான் இப்போது இமயமலையில் இருக்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: