×

ஆலோசனை கூற 3 பேர் குழு டிஎச்எப்எல் மீது திவால் நடவடிக்கைகள் தீவிரம்

* பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம்
*பதைபதைப்பில் முதலீட்டாளர்கள்

புதுடெல்லி: டிஎச்எப்எல் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி புகாரில் சிக்கியுள்ளது. இந்த நிறுவனத்தில் பணம் போட்ட டெபாசிட்தாரர்கள், தங்கள் பணம் கிடைக்குமா என தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், டிஎச்எப்எல் நிர்வாக குழுவை ரிசர்வ் வங்கி கலைத்து உத்தரவிட்டது. அதோடு, அந்த நிறுவனத்தை நிர்வகிக்க, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆர்.சுப்பிரமணியகுமார் நியமிக்கப்பட்டார்.  இவருக்கு ஆலோசனை கூற 3 பேர் கொண்ட குழுவை அமைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அந்த குழுவில் ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் அலுவல் சாரா தலைவர் ராஜீவ் லால், ஐசிஐசிஐ காப்பீட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் என்.எஸ்.கண்ணன் மற்றும் மியூச்சுவல் பண்ட் சங்க தலைமை செயல் அதிகாரி என்.எஸ்.வெங்கடேஷ் இடம்பெற்றுள்ளனர்.  

இதன்மூலம் திவால் நடவடிக்கையை விரைவாக செயல்படுத்த முடியும் என ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிஎச்எப்எல் நிறுவனம், புதிய திவால் சட்டப்படி முதன்முதலாக திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் வங்கிசாரா நிதி நிறுவனமாகும்.  திவால் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவதால், டிஎச்பெஎல் டெபாசிட்தாரர்களுக்கு, பணம் திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை துளிர் விட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த கடன் 83,873 கோடி. இதில், டெபாசிட் 6,188 கோடி. மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் 41,431 கோடி அடங்கும். இதுதவிர, பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த நிறுவனம் தர வேண்டிய தொகை 36,000 கோடி என கூறப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் பெரும்பாலான வங்கிகள் இந்த நிறுவனம் தர வேண்டிய கடனை வராக்கடனாக அறிவிக்க உள்ளன.

இதனால் வங்கிகளுக்கு கடும் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. டிஎச்எப்எல் கடனுக்க ஈடாக அந்த நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை வசப்படுத்த வங்கிகள் திட்டமிட்டுள்ளன. ஆனால், இதற்கு முறையான ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், இந்த  ஆண்டில் மட்டும் டிஎச்எப்எல் நிறுவன பங்குகள் மதிப்பு 90 சதவீதம்  சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : group ,DHFL ,bankruptcy proceedings , DHFL, Bankruptcy
× RELATED 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான...